மகா சமுத்திர ஆரத்தி : ஆன்மீக சக்தி தமிழகத்தை ஆட்கொள்ளும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2022 08:05
நாகர்கோவில் : ஆன்மீக சக்தி தமிழகத்தை ஆட்கொள்ளும் காலம் விரைவில் வரும் னெ்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற மகா சமுத்திர ஆரத்தியில் பங்கேற்ற அவர் பேசியதாவது: பிரதமர் மோடி கங்கா ஆரத்தியை மிக பிரபலப்படுத்தினார். பாண்டிச்சேரியில் தென் காஞ்சியை தென் கங்கையாக கருதி நாங்கள் அங்கு ஆரத்தி எடுத்து வருகிறோம். இதேபோல் ஒவ்வொரு நதியிலும் ஒவ்வொரு கடல் பகுதியிலும் ஆரத்தி எடுக்கும் போது நீர் நிலைகளை நாம் பாதுகாக்க முடியும். நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப் படக்கூடாது. ஆரம்ப காலத்தில் நதிகளை வணங்கி தான் நம் நாகரிகமே தொடங்கியது. ஒரு ஆன்மீக சக்தி தமிழகத்தை ஆட்கொள்ளும் காலம் வெகுவிரைவில் இருக்கிறது. ஆன்மிகத்தை விடுத்து தமிழ் கிடையாது. எனவே இந்த ஆன்மிக பூமியில் நாம் ஆன்மிகத்தை பின்பற்றும் போதுதான் நாமெல்லாம் ஒழுக்கத்துடன் உயர்வோம். நாம் உயர வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மதுரை அத்வைத் ஆஸ்ரமம் கோபாலானந்தா சுவாமி, வெள்ளிமலை சுவாமி தைன்யானந்தஜி மகராஜ் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முன்னதாக நாகர்கோவிலில் திருமண நிகழ்ச்சியில் தமிழிசை பேசியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை விருப்பப்பட்டவர்கள் இந்தி படிக்கலாம். நமது மொழியை பாராட்டும் அதே நேரத்தில் அடுத்த மொழியை பழிப்பது அல்லது அவர்கள் தொழிலை பழிப்பது நமது கலாச்சாரத்துக்கு அழகல்ல. இன்னொரு மொழி படிப்பது என்பது படிப்பவருக்கு அது உதவியாக இருக்கும். இந்தியை படிக்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே ஆன்மீக தமிழ் உள்ளது. ஆன்மீகத்தை விடுத்து தமிழ் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.