மேட்டுப்பாளையம்: காமராஜ் நகரில் உள்ள, மகா முத்துமாரியம்மன் கோவிலில், இன்று குண்டம் விழா நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் காட்டூர் அடுத்த, காமராஜ் நகரில் மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் விழா இம்மாதம், 3ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 10ம் தேதி கம்பம் நடுதலும், 15ல் பூச்சட்டி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை அக்னி குண்டம் கண் திறக்கப்பட்டது. அதையடுத்து குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்து, பூ போடும் நிகழ்ச்சி இரவு துவங்கியது. இன்று காலை, பவானி ஆற்றில் இருந்து, தாரை, தப்பட்டை, பம்பை, உடுக்கை முழங்க, கோவிலுக்கு அம்மன் சுவாமியை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை, 8:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பின்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜை நடைபெற உள்ளது. அதன் பின் மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலையில் குஞ்சப்பனை மாரியம்மன் கோவிலில் இருந்து, அலகு குத்தி கோவிலுக்கு வரும் நிகழ்ச்சியும், 19ம் தேதி மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது. 24ம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.