உளுந்தூர்பேட்டை: நத்தாமூர் ஸ்ரீ கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா நத்தாமூர் கிராமத்தில் ஸ்ரீ கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த 3ம் தேதி மாலை 4 மணிக்கு குடி அழைத்தல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. 4ம் தேதி காலை 10 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 6ம் தேதி இரவு ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ கூத்தாண்டவர் சுவாமிகள் வீதியுலா நடந்தது. 15ம் தேதி மூன்றாம் கால் நடுதல் மற்றும் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. 17ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு ஸ்ரீ கூத்தாண்டவர் சுவாமிக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கரகாட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 9 மணி அளவில் கூத்தாண்டவர் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை காலை 9 மணிக்கு கூத்தாண்டவர் சுவாமிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.