பதிவு செய்த நாள்
20
மே
2022
09:05
சிதம்பரம், அரசின் அதிரடி உத்தரவை தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பின், கனகசபையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உலக புகழ் பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. ஆகாய தலமாக விளங்கும் இக்கோவில், தில்லைவாழ் அந்தணர்கள் எனும் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
சிதம்பர ரகசியம்: இங்கு, உருவமில்லா அபூர்வ தரிசனமான சிதம்பர ரகசியத்தை நித்ய பூஜை செய்யும் தீட்சிதர், திரை விலக்கி பக்தர்களுக்கு காண்பிப்பார். கடந்த, 2015ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்கு பின், கனகசபையின் மேல் ஏறும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. சிதம்பர ரகசிய தரிசனம் நிறுத்தப் பட்டது.அதை தொடர்ந்து, கொரோனா காரணமாக அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி, பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது, கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசிக்கும் வாய்ப்பு தீட்சிதர்களால் நிறுத்தப்பட்டது.கொரோனா பாதிப்பு குறைந்து, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், கனகசபை மேல் ஏற அனுமதி அளிக்கப்படவில்லை.
இது தொடர்பாக, இரண்டு ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.இந்நிலையில், நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.விசாரணை நடத்திய தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர், கனகசபையில் இருந்து, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கும் விவகாரத்தில், அரசே உரிய முடிவை எடுக்க வேண்டும் என, ஏப்., 20ல் உத்தரவிட்டனர்.
அதில், மாவட்ட கலெக்டர், அறநிலையத் துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆலோசித்து முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், சிதம்பரம் கோவிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்கத்தின் படியும், பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றும், கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதித்து உத்தரவு பிறப்பிக்கலாம் என, அறநிலையத் துறை ஆணையர், அரசுக்கு பரிந்துரை செய்தார்.இதையடுத்து, கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி, நேற்று முன்தினம் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
பக்தர்கள் பரவசம்: அரசு உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில், நேற்று சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கனகசபையில் ஏறி, பக்தர்கள் நடராஜரை வழிபட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என, கூடுதல் கலெக்டர், தீட்சிதர்களிடம் தெரிவித்தார்.தீட்சிதர்கள்,
தமிழக அரசு பொது தீட்சிதர்களிடம் கருத்து கேட்கவில்லை. கால அவகாசம் வேண்டும் என கேட்டனர். அதை ஏற்றுக்கொள்ளாத கூடுதல் கலெக்டர், அரசு உத்தரவை நிறைவேற்ற வேண்டும்; தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.தொடர்ந்து, நேற்று மாலை 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டபோது, பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் பரவசத்துடன் நடராஜரை தரிசனம் செய்தனர். இதனால், இரண்டாண்டு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.