பதிவு செய்த நாள்
20
மே
2022
10:05
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே, குளத்தில், 100 நாள் வேலை திட்ட பணியின்போது, பூமிக்குள் புதைந்திருந்த, 15ம் நுாற்றாண்டு சிலை கண்டெடுக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், கலியனுார் கிராமத்தில் கைலாசநாதர் கோவில் குளத்தில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தின்கீழ் பெண்கள் வேலை செய்து வந்தனர்.கடப்பாரையில் பள்ளம் தோண்டும் போது, சிலை ஒன்று இருந்தது தெரிந்தது. கிராம மக்கள் அந்த அம்மன் சிலையை எடுத்து மஞ்சள், குங்குமம் பூசி, கற்பூரம் ஏற்றி வழிபட தொடங்கினர்.வருவாய் துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். இச்சிலையை, கலியனுாரில் உள்ள கோவிலில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என, கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும், தொல்லியல் துறையினர் வந்து பார்வையிட்டு, சிலையை ஆய்வு செய்து, பின் கூறியதாவது:இந்த சிலை, 15ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்; ஸ்ரீதேவியின் சகோதரி மூத்தி தேவியின் சிலை போல் காட்சியளிக்கிறது. பல்லவர் காலத்தில் செல்வத்திற்காகவும், வளத்திற்காகவும் நீர்நிலைகளில் வைத்து வழிபட்டு வந்திருக்கலாம். தமிழகத்தில் பெரும்பாக்கம், தென் திருவள்ளூர் போன்ற இடங்களில் வைத்து வழிபாடு செய்துள்ளனர். மூத்த தேவி சிலையின் கையில் மகன் மாந்தன், மகள் மாந்தி உள்ளனர். பாற்கடலில் அமிர்தம் கடைந்த போது ஸ்ரீதேவிக்கு முன் வந்ததால், மூத்த தேவி என அழைப்பதுண்டு.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.