பதிவு செய்த நாள்
20
மே
2022
05:05
செஞ்சி: வடவெட்டி ஆதிலிங்கேசுவரர் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நேற்று நடந்தது.
மேல்மலையனூர் அடுத்த வடவெட்டி மலை மீதுள்ள கற்பகாம்பிகை உடனாகிய ஆதிலிங்கேசுவரர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு 16ம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் பிள்ளையார் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு ஆகியன நடந்தது. 17ம் தேதி பசுவழிபாடு, காப்பு அணிவித்தல், புதிய திருமேனிகள் கண்மலர்தலும், முதல் கால வேள்வி பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் இரண்டு, மூன்றாம் கால வேள்வியும், சூரிய பூஜை, விமான கலசம் நிலை நிறுத்தல், ஆகியன நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், தொடர்ந்து நான்காம் கால வேள்வியும், திருக்குடங்கள் புறப்பாடும் 10.40 மணிக்கு கருவரை விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டும், தொடர்ந்து மூல மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டும், மகா தீபாரதனையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை வடவெட்டி கிராம மக்கள், சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் தேவனூர், ஆரணி சிவனடியார் திருக்கூட்டம், திண்டிவனம் அண்ணாமலையார் பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.