மேலூர்: வெள்ளலூர் அய்யனார் கோயில்களில் நடைபெற்ற திருவிழாவில் 62 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலுார் செம்பூர் அய்யணார் கோயில்களில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு புரவி எடுப்பு திருவிழா துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவி்ன் முதல் நாளான இன்று பழையூர்பட்டி மந்தையில் உள்ள புரவிகளுக்கு கிராமத்தார்கள் மரியாதை செய்து கிடா வெட்டி புரவிகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெள்ளலுார் நாட்டு கிராமத்தார்கள் தலைமையில் புரவிகளை சுமந்து ஒன்றரை கி.மீ., தொலைவில் உள்ள வெள்ளலுார் மந்தைக்கு கொண்டு வரப்பட்டது. மந்தையில் இருந்து நாளை (மே 22) 3 புரவிகளை கடம்பூர் அய்யணார் கோயிலுக்கும், (மே 23) 2 புரவிகளை புதுப்பட்டி பெரம்பூர் அய்யணார் கோயிலுக்கும், ( மே 24 ) 2 புரவிகளை வெள்ளலுார் செம்பூர் அய்யணார் கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தவிர நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப்பெற்றவர்கள் புரவிகளை சுமந்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.