பதிவு செய்த நாள்
22
மே
2022
02:05
சென்னை : கோவில்களில், ஆன்மிக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் மீண்டும் நடத்தப்படும், என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை, நுங்கம்பாக்கம், அறநிலையத் துறை தலைமையகத்தில், சட்டசபை அறிவிப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று மாலை நடந்தது.பின், அமைச்சர் அளித்த பேட்டி:இந்த ஆண்டு, 2,417 கோவில்களில், 1,301 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
பசு மடங்கள், 120 கோவில்களில் உள்ளன. சென்னை பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கும் பசுக்களை பராமரிக்க, ஆவடியில் பசு மடம்; ஸ்ரீரங்கம் கோவிலில், 2.50 கோடி ரூபாயில் நவீன வசதிகளுடன் பசு மடம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.பதினெண் சித்தர்களோடு தொடர்புடைய கோவில்களில், சித்தர்களுக்கு ஆண்டுதோறும் விழா எடுக்கப்படும். கோவில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் மீண்டும் முதற்கட்டமாக, 48 முதுநிலை கோவில்களில் நடத்தப்படும்.பெரியபாளையம் பவானி அம்மன், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர், நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவில்களில் தங்கத் தேர்; திருத்தணி, திருக்கருகாவூர் கோவில்களில் வெள்ளித் தேர் செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.