பதிவு செய்த நாள்
23
மே
2022
02:05
வாழ்வில் முன்னேற என்ன செய்ய வேண்டும்? எப்போதும் மாணவனாக இருந்தாலே, சிறு பொருளும் நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கும்.
பறவையைக் கண்டான்; விமானம் படைத்தான். பாயும் மீன்களில் படகினைக் கண்டான். எதிரொலி கேட்டான்; வானொலி படைத்தான். கண்ணால் கண்டதை கருத்தில் கொண்டு புதிய கருவிகளைப் படைத்தான். அதனால் தான் உயர்ந்து நிற்கிறான் மனிதன்.
மனஒருமைப்பாடே அறிவின் சாரமாகும். மனம் குவியாமல் எந்த செயலிலும் ஈடுபட முடியாது. மனதில் எழும் எண்ணங்களுக்கு ஏற்பவே நம் வாழ்வு அமைகிறது.
‘என்னால் முடியாது’ என ஒருவன் சொல்லக் கூடாது. செயலில் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும்.
‘வலிமையோடு செயல்படுவது தான் வெற்றியாளரின் வாழ்க்கை. உதவிக்கு யாரும் வரவில்லையே என வருந்துவது தவறு. இலையில் இட்ட உணவு, அவரவர் கையின் முயற்சியால் தானே வாயைச் சென்றடைகிறது. அதுபோல முயற்சியின்றி உயர முடியாது.
கண்கள் முன் நோக்கித் தானே இருக்கின்றது. உற்றுப் பார்த்தால் பல விஷயங்கள் புரியும். யாரிடமும் லாபநோக்கில் பழகக் கூடாது. தாய்மரத்தின் அடியில் கிடக்கும் விதைகளை நிலத்தில் கொண்டு தள்ளுகிறது காற்று. ஏன் தள்ள வேண்டும் என ஒருபோதும் அது நினைப்பதில்லை. கைமாறு கருதாமல் வானம் பொழிகிறது. சூரிய ஒளியால் வெயிலடிக்கிறது.
காக்கைக்கு சோறு வைத்து விட்டு உண்ணுகிறதா எனக் கூட பார்ப்பதில்லை. ஆனால் காகம் சோற்றில் வாயை வைக்கும் முன் கரைந்து மற்ற காக்கைகளை உண்ண அழைக்கிறது. பகிர்ந்து உண்ணாமல் தான் மட்டும் அனுபவிப்பது பாவம் என்பது காகம் சொல்லும் பாடம்.
‘‘ ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு’’ என்றொரு பழமொழி உண்டு. இதன் பொருள் என்ன?
சிறிய வாய்ப்புக்கள் வரும் பொழுது அவை கைநழுவிப் போகலாம். அதற்காக மனம் தளரத் தேவையில்லை. பெரிய வாய்ப்பு வரும் போது ‘கப்பு’னு பிடித்துக் கொள்ள வேண்டும். சின்ன மீன்கள் ஆற்றில் துள்ளியோடும். அப்போது பாறை மீது கொக்கு நின்றிருந்தாலும் பொருட்படுத்தாது. ஆனால் பெரிய மீன் வரும் போது சட்டென்று கொத்தி விடும். அதுபோல மனிதனும் காத்திருந்து குறிக்கோளை அடைய வேண்டும்.
வாழ்வில் முன்னேற துாக்கத்தைக் குறைப்பது அவசியம். துாக்கம் நம் வசமாக வேண்டும். அதன் வசம் நாம் செல்லக் கூடாது. ‘நல்ல பொழுதை எல்லாம் துாங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்’ என்ற திரைப்பாடல் இந்த கருத்தை எடுத்துச் சொல்லுகிறது.
அர்ஜூனனுக்கு ‘‘குடகேசன்’’ என்றொரு பெயருண்டு. அதாவது துாக்கத்தை வென்றவன் என்பது பொருள். நெப்போலியன் குதிரையில் செல்லும் போதே துாங்கிக் கொள்வான் என்றும் சொல்வர். தொழிலாளியாக இருந்து பெரிய செல்வந்தராக உயர்ந்த ஓனாசிஸ் தன் வெற்றியின் ரகசியத்தை, ‘வாழ்வில் முன்னேற வேண்டுமானால் துாங்கும் நேரத்தை குறையுங்கள்’ எனக் குறிப்பிடுகிறார்.
‘முயல் – ஆமை கதையை தெரியாதவர்களே இல்லை. இரண்டுக்கும் இடையே நடந்த ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடிய முயல், இலக்கை அடையும் முன்பாக அலட்சியத்துடன் சற்று துாங்கியது. ஆனால் மெதுவாக நடக்கும் ஆமை விடாமுயற்சியால் இலக்கை எட்டியது. செயலில் ஈடுபடும் போது அலட்சியம் கூடாது.
மனிதன் தன்னை உணரும் விதத்தில் உபநிடதத்தில் பலகதைகள் உள்ளன. அதில் ஒன்றை பார்ப்போம்.
வேத காலத்தில் பரத்வாஜர் என்றொரு முனிவர் இருந்தார். மூன்று புருஷ ஆயுட்காலம் (ஒரு புருஷ ஆயுட்காலம் – 400 ஆண்டுகள்) பிரம்மச்சாரியாக இருந்து வேதம் படித்தவர் அவர். முதுமையடைந்த பின் அவரால் நடமாடக் கூட முடியவில்லை. ஆயிரத்து இருநுாறு ஆண்டுகள் வேதம் படித்த பரத்வாஜரை காண தேவலோக மன்னரான இந்திரனே வந்தார்.
‘‘ உமக்கு நான் இன்னும் ஒரு புருஷ ஆயுள் தருகிறேன். அதை எப்படிக் கழிப்பீர்?’’ எனக் கேட்டார் இந்திரன்.
‘‘அப்போதும் பிரம்மச்சாரியாக இருந்து வேதம் கற்பேன்’’ என்றார் பரத்வாஜர்.
மூன்று மலைகளைப் படைத்து, ஒவ்வொன்றில் இருந்தும் பிடிமணலை எடுத்து கொடுத்தார் இந்திரன்.
‘‘ இதோ... எதிரில் தெரிவது வேதமலைகள். இதுவரை நீர் கற்ற வேதம், இந்த மூன்று பிடிமண் அளவு தான்.’’ என்றார்.
முதலும், முடிவும் இல்லாதது கல்வி. அதனால் தான், ‘‘ கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு’’ என்ற பழமொழி உருவானது.
நம் தாய்மொழி மற்றும் படித்த மொழிகள் மட்டுமே நமக்கு தெரியும். இந்நிலையில் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அங்கு பேசும் மொழி தெரியாவிட்டால் நாம் ஏதும் தெரியாத ‘‘தற்குறிகள்’’ தானே.
‘‘ பலம் எது? பலவீனம் எது? என்பது புரிந்தால் நம் ஆணவம் ஓடி விடும்.
‘‘மிருகத்தனம், மானுடம், தெய்வீகம் என்ற மூன்று பண்புகள் நம்மிடம் உள்ளன. மிருகத்தனத்தை அழித்து மனிதனாக வாழ முயற்சி செய். அதன் பின் தெய்வநிலைக்கு உயரலாம்’’ என்கிறார் விவேகானந்தர்.
கற்பதற்காகவே நாம் மனிதராக பிறக்கிறோம். வாழ்வின் இன்பமே, அறிவு பெறுவதில் தான் இருக்கிறது.