பதிவு செய்த நாள்
23
மே
2022
04:05
அன்னூர்: சொக்கம்பாளையம், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 3ம் தேதி நடக்கிறது.
சொக்கம்பாளையத்தில், பழமையான அரச மரத்து பிள்ளையார் கோவில் மற்றும் மாகாளியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் பீடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா வரும் 1ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. அன்று மாலை முதற்கால வேள்வி பூஜை, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடக்கிறது. 2ம் தேதி காலையில், இரண்டாம் கால வேள்வியும், எண்வகை மருந்து சாத்துதலும், நடக்கிறது. மாலையில் மூன்றாம் கால வேள்வியும் மலர் வழிபாடும் நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை 7:00 மணிக்கு, பிள்ளையார் மற்றும் மாகாளியம்மனுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து மகாபிஷேகம், தச தரிசனம், அலங்கார பூஜை நடக்கிறது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகள் ஆகியோர் அருளுரை வழங்குகின்றனர். தமிழ் முறைப்படி வேள்வி ஏற்பாடுகளை பேரூர் சாந்தலிங்கர் அருள்நெறி மன்றத்தினர் செய்கின்றனர்.