பதிவு செய்த நாள்
23
மே
2022
04:05
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், நடைபெறாமல் உள்ள ராஜகோபுர திருப்பணியை, உடனடியாக துவக்க வேண்டும் என, பா.ஜ., மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் பாண்டுரங்கன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுக்கு, இவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழக சட்டசபையில் அறிவித்த, 165 கோவில் திருப்பணிகளில், மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள கோவில்கள் திருப்பணிகள் இடம்பெறவில்லை. இது பக்தர்களிடையே வேதனையை அளிக்கிறது. கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுக்கு, எட்டு கோடி ரூபாய் வருமானமும், 50 கோடி ரூபாய் நிதி ஆதாரம் உள்ளது. ஆனால், இக்கோவில் ராஜகோபுர மற்றும் சுற்றுப் பிரகாரம் திருப்பணிகள் சில ஆண்டுகளாக செய்யாமல் முடங்கிக் கிடக்கின்றன. இக்கோவிலில் பல சன்னதிகளுக்கு பூசாரிகளும் இல்லை. பவானி ஆற்றின் கரையோரம் படித்துறை கட்டுவதும் நின்றுள்ளது. பக்தர்கள் கழிப்பிடம் மற்றும் தங்கும் மண்டபம் ஆகியவை கட்டப்படாமல் உள்ளன. நிதி ஆதாரம் உள்ள கோயில் என்பதால், முழுநேர அன்னதானம் வழங்கும் திட்டத்தையும், பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தையும், வழங்க பரிசீலிக்க வேண்டும். கோவில் நிர்வாகம் சீராக நடைபெற, பரம்பரை அறங்காவலருடன், கூடுதல் அறங்காவலர்கள் நியமிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இதன் உப கோவிலான சந்தான வேணுகோபால் கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. இதன் ராஜகோபுரம் பணிகள் மற்றும் கோவில் புனரமைப்பு வேலைகள் ஏதும் செயல்படாமல் உள்ளன. அரங்கநாத கோயிலுக்கு சொந்தமான நந்தவனத்தில் கோசாலை அமைக்க வேண்டும். குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோவில், 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோவிலில் திருமண மண்டபம், ராஜகோபுர திருப்பணிகள் உடனடியாக செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாண்டுரங்கன் மனுவில் கூறியுள்ளார்.