பதிவு செய்த நாள்
26
மே
2022
08:05
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி மகாமாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பண்டிகை துவக்க விழா நடந்தது.
வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாதம், 15 நாட்கள் பூச்சாட்டு திருவிழா நடக்கும். விழாவில், வீரபாண்டியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். முதல்நாள் நிகழ்வான பூச்சாட்டு விழா கோயில் வளாகத்தில் நடந்தது. மாரியம்மனுக்கு பன்னீரு வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், பூச்சாட்டு நடந்தது. தொடர்ந்து, கம்பம் நடுதல், நகை சீர் கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய நிகழ்வான பண்டிகை ஜூன், 8ம் தேதி நடக்கிறது. அப்போது சக்திகரகம் அழைத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு, ஊர்வலங்கள் நடக்கின்றன. பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் பண்டிகையும் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இங்கு ஜூன், 8ம் தேதி பண்டிகை நடக்கிறது.
இதேபோல, கூடலூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவும் பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து, 15 நாட்கள் அக்னிச்சட்டி யுடன் கம்பம் சுற்றி ஆடுதல் நடக்கிறது. நாயக்கன்பாளையம், புதுப்புதூர் கிராமங்களில் இருந்து நகை சீர் எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜூன், 5ல் மகா மாரியம்மனுக்கு திருக்கல்யாணமும், 7ம் தேதி மாவிளக்கு ஊர்வலமும், எட்டாம் தேதி எருது பிடித்தல் நிகழ்ச்சியும், 9ம் தேதி மஞ்சள் நீராட்டும், நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.