பந்தலூர்: பந்தலூர் அருகே சேரங்கோடு மாரியம்மன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு சிறப்பு சங்காபிஷேகம் நடந்தது.
சேரங்கோடு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்த நிலையில் நேற்று 48வது நாள் சிறப்பு பூஜை நடந்தது. இதில் குருக்கள் தியாகராஜ் தலைமையிலான குழுவினர் சிறப்பு பூஜைகள் நடத்தினார்கள். இதில் 108 சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்ற நிலையில் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை டான்டீ கோட்ட மேலாளர் சிவக்குமார், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் தனபால், செயலாளர் சிவகுமார், பொருளாளர் நகுலேஸ்வரன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.