பதிவு செய்த நாள்
31
மே
2022
06:05
வெ.சங்கரராம அய்யர், புதுச்சேரியிலிருந்து அனுப்பிய, இ - மெயில் கடிதம்: சென்னை சவுகார்பேட்டை, வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 137 ஏக்கர் நிலத்தை, உடனடியாக ஹிந்து சமய அறநிலையத் துறை மீட்க வேண்டும் என, இம்மாதம், 25ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த நிலத்தை எல்லாம் வீட்டுமனைகளாக பிரித்து விட்டனர்.
என்ன அநியாயம்... கோவில் சொத்து, பக்தர்கள், பொதுமக்கள் சொத்து என்ற எண்ணமே இல்லையா? இந்த, 137 ஏக்கர் நிலமும், திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானுாரில் உள்ளது. இங்கு ஒரு ஏக்கர் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 5 லட்சம் ரூபாய். அதன்படி பார்த்தால், 137 ஏக்கர் நிலத்தின் மதிப்பு, 6.85 கோடி ரூபாய். இந்த நிலத்தை விற்று, கோவில் பெயரில் வங்கியில் டிபாசிட் செய்திருந்தால், 6 சதவீத வட்டி என்றாலும், மாதம், 3.42 லட்சம் வீதம், ஒரு ஆண்டுக்கு, 41 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இன்றைய தேதியில் மாதம், 3.42 லட்சம் ரூபாய் வருமானம் வரக்கூடிய அளவிலான நிலத்தை, ஒரு புண்ணிய ஆத்மா, பல ஆண்டுகளுக்கு முன்ன தாக, வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு எழுதி வைத்துள்ளது. பெருமாள் மீதான பக்தியாலும், மக்களுக்கு பசிப்பிணி போக்கவும், பக்தி தழைத்தோங்கவும், மகத்தான இந்த நற்செயலை அந்த நபர் செய்துள்ளார். ஆனால், அவ்வளவு நிலத்தை, கொடூர நெஞ்சம் உடையவர்கள் அபகரித்து, வீட்டு மனைகளாக மாற்றி விட்டனர் என்பதை கேட்கும் போது, நெஞ்சு பதை பதைக்கிறது.
இந்த நிலத்தின் வாயிலாக, மாதம், 3.42 லட்சம் ரூபாய் வருமானம் ஒழுங்காக வர ஏற்பாடு செய்திருந்தால், கோவிலில் திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்பட்டிருக்கும்; கோவில் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் நல்ல சம்பளம் பெற்றிருப்பர். கோவில் சொத்து தெய்வத்திற்கு உரிமையானது. அதை அபகரித்து, சுயநலத்துக்கு பயன்படுத்துவது, சமுதாயத்தின் வாயில் மண்ணை அள்ளி போடுவதற்கும் சமம். விரைவில், அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு, உருப்படியான வழியில் அதை பயன்படுத்தி, கோவிலுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.