உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே பழமையான வளரி ஆயுதத்துடன் மேலும் ஒரு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவாரத்தில் உள்ளது கள்ளபட்டி. கிராமத்திற்கு வடக்கே விநாயகர் கோவில் அருகே மக்களால் பட்ட வினையன் என்றழைக்கப்படும் நடுகல் பழமையான தமிழர்களின் ஆயுதமான வளரியுடன் காணப்படுகிறது.
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், வரலாற்று ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் கூறியதாவது: பட்ட வினையன் என்பது ஏதாவது ஒரு வினையால் மாண்டு பட்டவன் என்று பொருள். சுமார் 3.5 அடி உயரத்தில் 2.8 அடி அகலத்தில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தலை உச்சியில் ஒரு பக்க கொண்டை, கழுத்தணிகள் அணிந்தும், இடுப்பில் இருந்து முழங்கால் வரை இடைகச்சு ஆடையும் அணிந்தும் காணப்படுகின்றார். அவரது இடது கையில் வேலும், வலது கையில் வளரி என்ற வளரித்தடியை வைத்துள்ளார். இச்சிலை அமைப்பின் மூலம் இது சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது எனலாம். ஆங்கிலேயர் ஆட்சியின் போது தடை செய்யப்பட்ட வளரி என்ற தொன்மையான ஆயுதம் இப்பகுதியில் வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு ஆதாரமாக கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள பட்டவன் சாமி கோயிலுக்கு வளரி ஆயுதம் நேர்த்திக்கடனாக வழங்குகின்றனர். கீரிப்பட்டி வங்காருத்தேவன் வளரி வீரர் என அழைக்கப்படுகிறார். எ.கோட்டைப்பட்டியில் வளரி ஆயுதத்துடன் நடுகல் உள்ளது.
இச்சிற்பம் குறித்து கிராம மக்கள் கூறியதாவது: இங்கு வாழ்ந்த இரண்டு இனக்குழு மக்களின் சண்டையின்போது உயிரிழந்த ஒரு வீரனின் சிலை என்றும், இன்றளவும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் எப்போதாவது வந்து வழிபடும் வழக்கம் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.