பவானிசாகர் அருகே தெங்குமரஹடா வனப்பகுதி கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பவானிசாகர் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியான மாயாற்றின் கரையில் தெங்குமரஹடா வனப்பகுதியில், மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் முன் விறகுகள் அடுக்கப்பட்டு குண்டம் வார்க்கப்பட்டது. தீக்குண்டத்தில் கோவில் பூசாரி பூஜை செய்து குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார். பூசாரியை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் கையில் வேப்பிலை ஏந்தியபடி கோவில் முன் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பக்தி பரவசத்துடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியதோடு மழை வேண்டி மாகாளியம்மனுக்கு வழிபாடு செய்தனர்.