பதிவு செய்த நாள்
05
ஜூன்
2022
10:06
மயிலாடுதுறை: சிதம்பரம் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்றுக் கொள்ளும் திட்டம் இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவிலில் நேற்று காலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வந்தார். அவரை கோவில் சார்பில் வரவேற்றனர் தொடர்ந்து அமைச்சர் கோவிலுக்குள் சென்று கோபூஜை கஜபூஜை செய்து, சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அமைச்சர் தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு வந்து தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் குருமகாசன்னிதானம் முன்னிலையில் அமைச்சர் சேகர்பாபு ஆதீனத்தின் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு மரக்கன்றுகளை நட்டு வைத்ததுடன் பாடசாலையை பார்வையிட்டார். பின்னர் தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம், அமைச்சர் இருவரும் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானம்: மரங்கள் இறைவனுக்கு ஒப்பானவை சிவபெருமான் விஷத்தை தான் உண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு அளித்ததைப் போன்று மரங்கள் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனைப் உயிரினங்களுக்கு அளிக்கின்றன. கொரோனா காலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. எனவே ஆக்சிஜனை உருவாக்கும் மரங்களை அதிகமாக வளர்க்கும் நோக்கில் தருமபுரம் ஆதீனத்தில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. திட்டத்தை தொடங்கி வைத்து, தருமபுரம் ஆதீனத்தில் 25 அறைகள் கொண்ட குருஞானசம்பந்தர் அருளிய நிலையம் என்ற விருந்தினர் மாளிகையை அறநிலையத்துறை அமைச்சர் திறந்து வைத்துள்ளார். தருமபுரம் ஆதீனத்தில் அணையா அடுப்பு திட்டத்தில் உணவு தயார் செய்யவும் தற்போது விறகு பயன்படுத்தப்படுவதில்லை. கல்லூரியில் பவள விழா நிறைவு விழா ஆகஸ்ட் மாதத்தில் வருகிறது. இவ்விழாவில் தமிழக முதல்வரை அழைத்துவர அறநிலை துறை அமைச்சரிடம் கூறியுள்ளோம். மரபு வழியை பின்பற்றும் ஆதீனங்களோடு இந்த அரசு இணக்கமாகச் செயல்படுகிறது என்றார்.
அமைச்சர் சேகர் பாபு: தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் திருப்பணிகள் தொடங்கி முடிவடையாமல் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும், பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மார்ச் 27ஆம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ஆதீனம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அப்போது வர முடியாததால் கோவிலில் தரிசனம் செய்தேன். இந்த கோவில் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் அதில் உள்ள அருங்காட்சியகம் தேவாரப் பாடசாலை பசுமடம், பள்ளி ஆகியவற்றையும் பார்வையிட்டேன். பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு உயர் தரமான உணவு வழங்கப்படுவதோடு தமிழ், ஆங்கில கல்வி கற்றுத்தரப்படுகிறது. பக்தி பசியையும், வயிற்றுப் பசியையும் குருமகாசன்னிதானம் தீர்த்து வைத்துள்ளார். இந்த நட்பு தொடரும். தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் வெள்ளி விழா, பொன் விழா ஆண்டுகளில் திமுக ஆட்சி நடைபெற்றது. பவளவிழா ஆட்சியிலும் திமுக ஆட்சி நடைபெறுவதால் இவ்விழாவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்று குரு மகா சந்நிதானத்தின் விருப்பத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். அவரது வழிகாட்டுதலின்படி பவள விழா சிறப்பாக நடைபெற தமிழக அரசும், அறநிலையத்துறையும் ஒத்துழைப்பு அளிக்கும் திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ள நிலையில் 1500 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிகழாண்டில் தொடங்கி விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மையான கோவில்களுக்கு ரூ 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 80 கோவில்களில் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும். தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட 27 கோவில்களில் திமுக ஆட்சியில் 18 கோவில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மலை கோவில்களான வெள்ளியங்கிரி நாதர், சதுரகிரி, நரசிம்மன் கோவில், பருவதமலை, கண்ணகி கோவில் ஆகிய ஐந்து கோவில்களில் ஆய்வு செய்வதற்கு ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பழமை மாறாமல் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக குழு அமைக்கப்படும். இந்து சமய அறநிலையத் துறையை பொருத்தவரை சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை 2019ஆம் ஆண்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. கொரோனா தொற்றுக்கு பிறகு கனகசபையில் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கனகராஜ் என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல நோக்கோடு முறையீடு செய்ததன் காரணமாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. அதுபோல தருமபுரம் ஆதீனம் நிர்வகிக்கும் கோவில்களில் எந்த புகாரும், சர்ச்சையும் ஏற்படவில்லை. சிதம்பரம் நடராஜர் கோவிலை பொருத்தவரை தீட்சதர்களுக்குள் உள்ள பிரச்சினை, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பிரச்சினைகள் என்று பல புகார்கள் வந்துள்ளது. புகார்கள் குறித்து ஆய்வு செய்யவே அறநிலையத்துறை சார்பில் கடிதம் அனுப்பியுள்ளோம். திருக்கோவிலை அறநிலையத்துறை ஏற்றுக்கொள்ளும் என்று நாங்கள் கூறவில்லை. பொது கோவில்களில் புகார்கள் வந்தால் அதனை விசாரிக்க அறநிலையத்துறைக்கு உரிமை உண்டு. இது தீட்சிதர்களுக்கு, தில்லை நடராஜர் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை இல்லை. சிறந்த முறையில் நடைபெறும் நிர்வாகம் கோவில்களை அறநிலையத் துறை கையில் எடுக்க முயற்சிக்கக் கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் புகார்கள் இருந்தால் தான் அந்த கோவில்கள் குறித்து விசாரணை நடத்துவோம். இறையன்பர்கள் மகிழ்ச்சிதான் அறநிலையத் துறையினரின் மகிழ்ச்சி என்றார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் பூம்புகார் நிவேதா எம் முருகன், சீர்காழி பன்னீர்செல்வம், மயிலாடுதுறை ராஜ குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.