பதிவு செய்த நாள்
07
ஜூன்
2022
12:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் யானையின் நீச்சல் குளம் பயன்படுத்த முடியாமல் கிடப்பில் உள்ளதால், சுட்டெரிக்கும் வெயிலில் கோயில் யானை தவிக்கிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு 2012ல் ஐந்து வயதில் ராமலட்சுமி எனும் யானை கொண்டு வந்தனர். கோடை காலத்தில் ராமேஸ்வரம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் தாக்கு பிடிக்க முடியாமல் மக்கள் திணறி வரும் நிலையில், ராமலட்சுமிக்கு கோயில் நிர்வாகம் பிரத்தியோகமான நீச்சல் குளம், சவர்பாத் எதுவும் அமைக்கவில்லை. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக சுட்டெரிக்கும் கோடை வெயிலில் ராமலட்சுமி தவித்தது. இச்சூழலில் 2021ல் கோயிலில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் ராமலட்சுமிக்கு கோயில் நிர்வாகம் நீச்சல் குளம் அமைத்தது. துவக்கத்தில் இங்கு உற்சகமாக குளித்து சென்ற ராமலட்சுமி, காலப்போக்கில் பெரிதும் சிரமபட்டது. ஏனெனில் கோயில் முதல் நீச்சல் குளம் வரை சாலை குண்டும், குழியுமாக இருந்தது. மேலும் வழியெங்கும் போக்குவரத்து நெரிசல், வாகன இரைச்சலும் இருந்ததால் ராமலட்சுமி மிரண்டது. இதனால் யானைக்கு, விபரீதம் ஏற்படக் கூடும் அபாயம் இருந்ததால், காலப்போக்கில் யானையை நீச்சல் குளத்திற்கு அழைத்து செல்வதை தவிர்த்தனர். இதனால் நீச்சல் குளத்தை ஆடு, மாடு, நாய்கள் அசுத்தமாக்கி தற்போது பயன்படுத்த முடியாதபடி உள்ளது. எனவே கோயில் வளாகத்தில் உள்ள வடக்கு நந்தவனத்தில் யானைக்கு இயற்கை சூழலுடன் பிரத்தியோக நீச்சல் குளம், சவர்பாத் அமைத்து புத்துணர்வு அளிக்க இந்து அறநிலைதுறை ஆணையர் உத்தரவிட வேண்டும்.