பதிவு செய்த நாள்
08
ஜூன்
2022
08:06
காரைக்கால்: காரைக்காலில் 5ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆயிரம் காளியம்மன் கோவில் பூசைவிழா நேற்று துவங்கியது.இதில் ஆயிரம் ஆயிரம் பழம்,மஞ்சள்,கும்குமம் உள்ளிட்ட பொருட்கள் அம்மனுக்கு காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர்.
காரைக்கால் திருப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற ஆயிரம்காளியம்மன் கோவிலில் 5ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆயிரங்காளியம்மன் பூசை விழா நேற்று துவங்கியது.பழங்காலத்தில் கடலில் மிதந்து வந்த பெட்டியில் அம்மனின் திருவுருவம் இருந்ததாகவும்,3 நாட்கள் பலரும் முயற்சித்து யாரிடமும் சிக்காமல் மிதந்த பெட்டி செங்குந்த முதலியார் பிரிவைச்சேர்ந்த முதியவர் மூலம் கரைக்கு கொண்டு வந்து அம்மனை எழுந்தருள செய்ததாகவும்,அதிலிருந்த அரசன் ஒருவரின் குறிப்பு மூலம் 5ஆண்டுகளுக்கு ஒரு முறை பெட்டியிருந்து அம்மனை எழுந்தருள செய்து ஆயிரம் ஆயிரம் பொருட்களை கொண்டு பூஜை செய்ய வேண்டும் என குறிப்பு எழுதப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.அதன்படி 5ஆண்டுகளுக்கு ஒரு முறை
ஆயிரங்காளியம்மன் பூசை விழா மிக விமர்ச்சியாக நடக்கிறது.கடந்த 6ம் தேதி நள்ளிரவு 5ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆயிரங்காளிம்மனைப் பேழையிலிருந்து எழுந்தருளச் செய்தல். பின்னர் அம்மனுக்கு 2நாட்கள் இடை விடாது பூஜைகள் நடக்கும். இந்த ஆயிரகாளியம்மன் கோவில் பூஜை விழா நேற்று மாலை துவங்குகிறது. பக்தர்கள் நேறிக்கடனை செலுத்தும் வகையில் ஆயிரம் ஆயிரம் மாம்பழம், எலும்பிச்சை, சாத்துக்குடி,மஞ்சள்,குங்குமம்,மஞ்சள் கயிறு,ஆப்பிள்,உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் இனிப்பு வகைகள்,மலர்கள் ஆகியவை ஆயிரம் ஆயிரமாக குடைகளில் வைக்கப்பட்டது.அபிராமி அம்மன் சமேத ஸ்ரீராஜசோளீச்சுரர் ஆலயத்திலிருந்து மங்கள வாத்தியங்கள் முழுங்க சகல விமரிசையுடன் ஆயிரம் ஆயிரம் பொருட்கள் வரிசை கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று(8ம் தேதி) அதிகாலை வரிசையாக கொண்டு வரப்பட்ட பழங்கள்,மஞ்சள்,இனிப்பு வகைகள்,மாலை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அம்மனுக்கு படையில் வைத்து தீபாரதனை நடக்கும். அதைத்தொடர்ந்து 8மற்றும் 9ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் அம்மனை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்பின் வரும் 10ம் தேதி மீண்டும் அம்மனை பெட்டியில் ஸ்தாபிதம் செய்யப்படும்.பின் மீண்டும் வரும் 2027ம் ஆண்டில் அம்பாளை தரிசனம் செய்யப்படும். மேலும் 5ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் விழா என்பதால், காரைக்கால் மட்டும் இன்றி தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வாழும் குடும்பத்தினர் அம்மனை தரிசனம் செய்ய காரைக்கால் குவிந்துள்ளனர்.வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.இந்நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ.,நாகதியாகராஜன் உள்ளிட்ட ஆயிரங்காளியம்மன் ஆலயத்தினர் பலர் கலந்துகொண்டனர்.