பதிவு செய்த நாள்
07
ஜூன்
2022
07:06
இன்று தூமாவதி தேவியை வழிபட ஞானம் புத்தி உண்டாகும். இத்தேவியை உபாசிப்பதால் சத்ரு நாசம், நல்ல பண்புகள், நல்ல ஞானம் கிட்டும். கஷ்டங்கள்,வியாதிகளிலிருந்து விடுபடலாம். சகல காரிய சித்தி, நல்லறிவு பெற தூமாவதி உபாசனை வழிவகுக்கிறது. இவள் 64 விதமான தரித்திரங்களை நாசம் செய்பவள். மஹாலக்ஷ்மி நமக்கு அளிக்கும் செல்வத்தை காப்பாற்றி கொடுக்கும் சக்தி படைத்தவள்.
இன்று பராசக்தியின் தசமஹா வித்தையின் 10 அவதாரங்களில் தூமாவதி அவதாரம் ஒன்றாகும். இது மஹாவிஷ்ணுவின் தசவதாரங்களில் மத்ஸ்ய அவதாரத்திற்கு இணையாகவும் நவகிரகங்களில் கேது பகவானின் தோஷத்தை நீக்க வல்லதும் தூமாவதி அம்பாளின் வடிவமாகும்.இந்த தேவியினை வழிபாடு செய்தால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவர். தகாத உறவு, கெட்ட பழக்கங்கள், தீய சக்திகள், தீய எண்ணங்கள் நீங்கும். நள்ளிரவில் பூஜை செய்ய நல்லது. தேவி பாகவத புராணத்தில், சாகம்பரி தேவியின் யுத்தத்தில் உதவியவர்களில் ஒருத்தியாக தூமாவதியைக் குறிப்பிடுகின்றது."சக்தி சங்கம தந்திரம்" நூல், தாட்சாயிணி வேள்விக்குண்டத்தில் பாய்ந்து உயிர்நீத்த பின், அவளது எரியும் சடலத்தின் புகையிலிருந்து கருநிறத்துடன் இவள் உதித்தாகச் சொல்கின்றது.
அடங்காப்பசியுடன் தன் கணவன் சிவனையே தின்று, அவள் விதவையானதாக "பிராணதோஷினி தந்திரத்தில்", ஒரு கதை உண்டு. இன்னொரு வரலாற்றில், சும்ப நிசும்பரை அழித்த போது, துர்க்கையின் படையில் தோன்றி, புகை மூலம் தூமாவதி, அசுரர்களை மயக்கி அழித்ததாகச் சொல்லப்படுகின்றது. தூமாவதி தந்திரமானது, அன்னை தூமாவதியை, வயதான அசிங்கமான கைம்பெண்ணாக வருணிக்கின்றது. மெல்லிய, உயரமான நோய்பீடித்தவளாக கானப்படும் அவள், மிகக் கொடியவள். கலைந்த கூந்தலும் அழுக்காடைகளுமே அவளது அலங்காரங்கள். பல்லுதிர்ந்து போனவளாக, ஒருகையில் முறமும், மறுகையில் அஞ்சேல் முத்திரையும் தாங்கி அவள் அமர்ந்திருப்பாள். காகத்தால் இழுக்கப்படும் தேரில் ஊரும் அவள், அடங்காப் பசியும் பெருவிடாயும் கொண்டவள். "பிரபஞ்ச சராசர சங்கிரகம்" நூலின் படி, கருநிறத்தவளான தூமாவதி, பாம்பணிந்து காணப்படுவாள். கத்தியும் கபாலமும் அவள் கைகளில் துலங்க,துடைப்பமும் முறமும் விளக்கும் தண்டமும் தாங்கியவளாக, பிச்சைக்காரி போல் ஆடையுடுத்து, அச்சமூட்டும் கூரிய கண்களுடன் காட்சி தருவாள். எலும்புகளைக் கடிக்கும் அச்சமூட்டும் ஒலி, அவள் வாயிலிருந்து எழுந்துகொண்டிருப்பதாக, "சாக்தப் பிரமோதம்" நூல் துதிக்கின்றது. அசுரப் பிணங்களை இரசித்துண்பவளாகவும், குருதிவிடாய் கொண்டவளாகவும் அவள் போற்றப்படுகிறாள்.
கைம்பெண்கள், அமங்கலத்தையும் கெட்ட சகுனமாக குறிக்கும் இந்தியப் பண்பாட்டில், தெய்வீகக் கைம்பெண்ணான தூமாவதி, அச்சமூட்டுபவளாக வலம்வருகிறாள். ஏழைகள், பசித்தோர், நோயாளிகள், வறுமை, அழிந்த ஊர்கள், வனாந்தரங்கள், பாலைவனங்கள் அனைத்தையும் ஆளும் கட்டற்ற தெய்வம் அவள். கைம்பெண்ணாயினும், எழிலோடு விளங்குபவளாக, காமரூபிணியாக பிற்காலச் சித்தரிப்புக்களில் அவள் கூறப்படுகிறாள். போதையில் வழிபடப்படும் தேவதையாகவும், மது, மாமிசம்,மச்சம், மைதுனம், தானியம் சேர்த்த "பஞ்சமகார பூசை" மூலம் திருப்திப்படுத்த வேண்டியவளாகவும் அன்னை தூமாவதி சொல்லப்படுகின்றாள். சிவனே மறைந்த பின்னும் எஞ்சுபவள் இவளென்றும் காலத்தைக் கடந்தவள் என்றும் தூமாவதி போற்றப்படுகின்றாள். பிரபஞ்சம் எரிந்தழிந்த பின் எஞ்சும் பெரும்புகையே தூமாவதி. கொடியவளாயினும் இளகிய மனம் படைத்தவள். பெண்களால் சூழப்பட்டவள். மூதாட்டியாக சிறுவர்களுக்குப் பேரறிவை வழங்கும் குருவும் அவள்.தீமையில் விளைகின்ற, அல்லது தீமையின் முடிவைக் கட்டியம் கூறுகின்ற நன்மையை, அவள் குறிப்பால் உணர்த்துகின்றாள்.