பதிவு செய்த நாள்
10
ஜூன்
2022
05:06
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் வணிகர் வீதி அருகில், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், ராஜகோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் பக்தர்கள் முடிவு செய்தனர்.அதன்படி, ராஜகோபுரம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள், சமீபத்தில் நடந்து முடிந்தன.கும்பாபிஷேகத்தை ஒட்டி, இம்மாதம் 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.காலை 7:45 மணிக்கு மங்கல வாத்தியத்துடன், கலசம் புறப்பாடு நடந்தது. 8:00 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க, இசைக்கருவிகள் ஒலிக்க, ராஜகோபுரம் மற்றும் அனைத்து கோபுரங்களுக்கும், புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்நது, பத்ரகாளியம்மன், படவேட்டம்மன், பச்சையம்மன், விநாயகர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகம் நடந்த பத்ரகாளியம்மன் கோவில் தெருவைச் சுற்றியுள்ள அனைத்து தெருக்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.காலை 10:30 மணிக்கு மஹா அபிஷேகமும், தீப ஆராதனையும், மாலை 6:00 மணிக்கு பத்ரகாளியம்மன், விநாயகர் விசேஷ அலங்காரத்துடன் வீதியுலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம் குண்ணவாக்கம் கிராமத்தில் அகிலாண்டீஸ்வரி உடனுறை குண்டலீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவில் கட்டடம் மிகவும் சிதிலமடைந்து, கருவறைக்குள் சுவாமி சிலை மற்றும் நந்தி சிலை மட்டுமே மிஞ்சி இருந்தது.இக்கோவிலை புனரமைக்க, அப்பகுதி மக்கள் தீர்மானித்தனர். அதன்படி, பக்தர்களிடம் நன்கொடை வசூல் செய்து, சில மாதங்களாக கோவில் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன.புதிதாக கோபுரம் மற்றும் மண்டபம் புதுப்பொலிவு பெற்றது. இந்நிலையில், நேற்று கலசம் புறப்பாடு முடிந்து, காலை 10:00 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.வாலாஜாபாத் அடுத்த, கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில், புவனேஸ்வரி சமேத பீமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 6ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது.நேற்று காலை 10:00 மணிக்கு கலசப்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, 10:45 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாடாதவூரில் விசேஷம் : உத்திரமேரூர் ஒன்றியம், வாடாதவூர் கிராமத்தில் வேம்புலியம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு, கோவில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.காலை 10:00 மணிக்கு, கோபுர விமானத்திற்கும், 10:15 மணிக்கு வேம்புலியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.