பதிவு செய்த நாள்
12
ஜூன்
2022
08:06
சென்னை : வடபழநி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாகம் பெருவிழாவை முன்னிட்டு, அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி விசாக பிரம்மோற்சவமும், விடையாற்றி பெருவிழாவும் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகப் பெருவிழா, 3ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சண்முகர் வீதி உலாவும், தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், வைகாசி விசாகத்தையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பொள்ளாச்சி, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது.
முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர், முருகப்பெருமான், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகத்தையொட்டி, நேற்று காலை, 7:00 மணிக்கு பால், தயிர், திருநீறு, திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.