மடப்புரம் கோயிலில் சிலைகள் சேதம் : பக்தர்கள் வேதனை, கோயில் நிர்வாகம் அலட்சியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2022 02:06
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சேதமடைந்த சிலைகளை புதுப்பிக்காமல் இருப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயிலில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு வாரம்தோறும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு மற்றும் ஆடி வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், கடந்த 2017ல் கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்காக அய்யனார் சன்னதியில் இருந்து அகற்றப்பட்ட சிலைகள் இடப்பற்றாகுறை என காரணம் காட்டி ஐந்து வருடங்களாக இருட்டறையில் வைத்து பூட்டியுள்ளனர். பத்ரகாளியம்மனின் இருபுறமும் உள்ள பெண் தெய்வச்சிலைகள் சேதமடைந்து இருப்பதால் அவற்றை சேலைகள் கொண்டு சேலையை வைத்து மூடி மறைத்துள்ளனர். அய்யனார் சன்னதி கோபுரத்தில் உள்ள சிலைகள் பலவும் சேதமடைந்து மூளியாக காட்சியளிப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். பொதுவாக இந்து கோயில்களில் சேதமடைந்த சிலைகளை அகற்றி விடுவது வழக்கம், ஆனால் புதுப்பிக்கப்பட்ட ஐந்தே வருடங்களில் சிலைகள் சேதமடைந்துள்ளதால் அவற்றை அகற்றினால் பிரச்சனை வரும் என கருதி அகற்றாமல் அப்படியே வைத்துள்ளனர். தினசரி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மூளியாக உள்ள சிலைகளை கண்டு வேதனை தெரிவித்துள்ளனர். எனவே அறநிலையத்துறை மடப்புரம் கோயில் சேதமடைந்த சிலைகளை அகற்றி புதிய சிலைகளை வைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.