ராமேஸ்வரம் அக்னி தீர்த்த நடைபாதை சேதம் : சமூக விரோதிகள் அட்டகாசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2022 03:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்தம் நடைபாதையை சமூக விரோதிகள் சேதப்படுத்தி, இரும்பு கம்பிகளை திருடி சென்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பொழுதுபோக்கிட அக்னி தீர்த்தம் கடற்கரையில் மத்திய சுற்றுலா நிதியில் 400 மீட்டர் தூரத்திற்கு நடை பாதை அமைத்தனர். இங்கு ராமாயண வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தத்ரூப ஓவிய படங்கள் உள்ளதால், வாக்கிங் செல்லும் பக்தர்கள் கடற்கரை அழகு, ஓவியங்களை கண்டு ரசித்தனர். மேலும் பக்தர்கள், குழந்தைகள் கடலில் தவறி விலாதபடி நடைபாதை இருபுறமும் துருப்பிடிக்காத இரும்பு கம்பியில் தடுப்பு வேலி அமைத்து, இருளை பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைத்து நடைபாதை ஜொலித்தது. இங்கு பக்தர்களுடன் உள்ளூர் மக்களும் வாக்கிங் சென்று ரசித்த நிலையில், கடந்த சில மாதமாக சமூக விரோதிகள் சிலர் இரவில் நடைபாதையில் மது அருந்தி ரகளை செய்கின்றனர். மேலும் போதையில் நடைபாதையின் தடுப்பு சுவர், கருங்கல்லில் அமைத்த இருக்கைகளை உடைத்து சின்னாபின்னமாக்கி, இரும்பு கம்பிகளை பெயர்த்து திருடிச் சென்றுள்ளனர். மத்திய அரசு ரூ. 1.50 கோடியில் நடைபாதை புதுப்பித்த நிலையில், சமூக விரோதிகளால் பொலிவிழந்து அலங்கோலமாய் காட்சியளிக்கிறது. எனவே இரவில் நடைபாதையில் மக்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.