பதிவு செய்த நாள்
13
ஜூன்
2022
11:06
தர்மபுரி: பாப்பாரப்பட்டி அருகே, கோவில் திருவிழாவில், தேர் கவிழ்ந்ததில் பக்தர்கள் 3 பேர் இறந்தனர். மூவர் படுகாயம் அடைந்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஹள்ளியில், 18 கிராமங்களுக்கு சொந்தமான காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா கடந்த, 10ல் கரக திருநாளுடன் துவங்கியது. பின், 11ல் தீமிதி விழாவும், கும்ப பூஜையும், 12ல் அம்மன் திருக்கல்யாணமும் நடந்தது. இன்று காலை, 10:30 மணிக்கு சுவாமி ரதம் ஏறுதலும், மாலை, 4:00 மணிக்கு மேல் தேரோட்டமும் துவங்கியது. இதில், 18 கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுந்தனர். கோவிலை சுற்றி தேர் வந்தபோது, மாலை, 6:50 மணிக்கு தேரின் பின் சக்கரத்தின் அச்சாணி முறிந்தது. இதையறியாத பக்தர்கள் தேரை இழுத்தபோது, பள்ளத்தில் சக்கரம் சிக்கி முன்புறமாக தேர் கவிழ்ந்தது.
தேர் பீடத்தின் பகுதியில், 10க்கும் மேற்பட்டோர் சிக்கினர். அவர்களில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை பக்தர்களும் மற்றும் போலீசார் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பாப்பாரப்பட்டியை சேர்ந்த மனோகரன், 56, சரவணன், 60, ஆகியோர் இறந்தனர். மாதேஹள்ளியை சேர்ந்த முருகேசன், மாதேஸ் உட்பட மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வன், பென்னாகரம் எம்.எல்.ஏ., ஜி.கே.மணி, பென்னாகரம் தாசில்தார் அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர். பாப்பாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதிகாரிகள் அலட்சியம்: திருத்தொண்டர் சபை நிறுவனர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் கூறியதாவது: திருவிழாவின் போது, தேர் நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஒவ்வொரு நிலை அலுவலரும் கண்காணிக்க வேண்டும் என அரசாணை உள்ளது. இந்த தேர் பழுதாகி உள்ளது, அதை புதுப்பிக்க வேண்டும் என பல முறை மனு அளித்துள்ளேன். அனைத்து துறை செயலாளர்கள் முதல், கலெக்டர் வரை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன். கடந்த வாரம் தேரை நேரில் பார்வையிட்டு, அதை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக மீண்டும் முறையிட்டேன். ஆனால் எவரும் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகளின் அலட்சிய போக்கு, இன்று பல உயிர்களை பலி கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.5 லட்சம் நிதியுதவி : தேர்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.