நாதன் கோவில் ஜெகந்நாதப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2022 03:06
தஞ்சாவூர், கும்பகோணத்தை அடுத்த நாதன் கோயிலுள்ள, ஜெகந்நாதப்பெருமாள் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் 40ல் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோயில் சேத்திரமாகும். நாதன்கோயில் கிராமத்தில் உள்ள இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாதப் பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்த தலமாகும். நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராண தலம் என்ற சிறப்பும் உடையது. நந்திபெயரிலேயே தீர்த்தம் உடைய சிறப்பு பெற்ற தலம். பஞ்சாயுதபாணியாய் எழுந்தருளியிருக்கும் இப்பெருமானை திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் வாயிலாக மங்களாசாசனம் செய்துள்ளார். இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, திருவிழா நடைபெறும் வழக்கம். நிகழாண்டு கோவிலில் வளாகத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில், செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந்நாதப் பெருமாள் சுவாமிகள், பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.