பதிவு செய்த நாள்
20
ஜூன்
2022
11:06
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவசர சிகிச்சையளிக்க ஹிந்து அறநிலையத்துறை சார்பில் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள், வெளிநாடுகளில் இருந்து தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு மாரடைப்பு, மயக்கம் உட்பட திடீரென சில உடல்நலக்குறைவு ஏற்படுவது இயல்பு. இதற்காக அவசர சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்துச் செல்ல ஒரு ஆம்புலன்ஸ் உள்ளது.
இந்நிலையில் முதலுதவி உட்பட விரைந்து சிகிச்சையளிக்க ஹிந்து அறநிலையத்துறை சார்பில் மருத்துவமனையும் அமைய உள்ளது.கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பக்தர்களின் வசதிக்காக மருத்துவமனை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பி உள்ளோம். தலா 2 டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், உதவியாளர்கள் இருப்பர். உடல்நலக்குறைவு ஏற்படும் பக்தர்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும். பணிகள் முடிக்கப்பட்டபின் இம்மருத்துவமனை தற்காலிகமாக கோயில் உள்ளே ஒரு கட்டடத்தில் செயல்படும். படுக்கை வசதியும் உண்டு. மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர், என்றார். மருத்துவ அலுவலர், செவிலியர் பணிக்கு விண்ணபிக்க விரும்புவோர் ஹிந்து மதத்தவராக, தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள் உள்ளன. விண்ணப்ப படிவம், நிபந்தனைகளை www.maduraimeenakshi.org, www.tnhrce.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம், என்றனர்.