58 ஆண்டுகளாக புதுப்பிக்காமல் கிடக்கும் தனுஷ்கோடி ராமர் கோயில் சுற்று சுவர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2022 09:06
ராமேஸ்வரம்: 58 ஆண்டுகளாக தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் சுற்றுச்சுவர் புனரமைப்பு இன்றி முடங்கி கிடக்கிறது.
ராமாயண வரலாற்றில், சீதையை விடுவிக்க கோரி இலங்கை மன்னர் ராவணனிடம் தம்பி விபீஷணர் வலியுறுத்தினர். இதற்கு ராவணன் எதிர்ப்பு தெரிவித்து தம்பியை அவமரியாதை செய்தார். இதனால் அங்கிருந்து வான்வழியாக தனுஷ்கோடி வந்திறங்கிய விபீஷணரை, வானர சேனைகள் சந்தேகப்படுகின்றனர். உடனே ராமபிரான், தன்னை நாடி வருவோருக்கு அடைக்கலம் கொடுப்பதே தர்மம் எனக்கூறி, தம்பி லட்சுமணரிடம் கடல் நீரை எடுத்து வா என கூறினார். பின் விபீஷணரை இலங்கை மன்னராக அறிவித்து புனித நீரை ஊற்றி பட்டாபிஷேகம் சூட்டினார். இந்த வரலாற்று சம்பவத்தை நினைவு கூறும் விதமாக தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் உள்ளது.
பல நூறு ஆண்டுக்கு முன் அமைத்த இக்கோயிலுக்குள் கடல்நீர் புகாத வண்ணம், 200 மீட்டர் நீளத்தில் சுற்றுச்சுவர் அமைத்தனர். பழமையான இச்சுற்று சுவரை 1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலால் சேதமடைந்தது. அப்போது கோயிலும் சேதமடைந்து பின் புதுப்பித்தனர். ஆனால் கோயிலுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த சுண்ணாம்பு கலவையிலான சுற்றுச்சுவரை புதுப்பிக்க, இதுநாள் வரை இந்து அறநிலைத்துறை முன்வரவில்லை. இதனால் இயற்கை சீற்றத்தால் வரலாற்று கோயிலுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கடந்த 2020, 2021ல் இக்கோயில் உண்டியல் பணம், பழமையான கோபுர கலசத்தை திருடர்கள் திருடி சென்றனர். இதுவரை திருடர்களை போலீசார் கைது செய்யவில்லை. எனவே 58 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் பழமையான சுற்றுச்சுவரை புதுப்பித்து, இங்கு கூடுதல் காவலர்களை நியமிக்க இந்து அறநிலைத்துறை முன்வர வேண்டும்.