பதிவு செய்த நாள்
08
ஆக
2012
10:08
சேலம்: சேலம், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில், கருப்பூரில் உள்ள ஹரே கிருஷ்ண கோவில் வளாகத்தில், நாளையும்(ஆக.,9), நாளை மறுநாளும், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில், ஆண்டு தோறும், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாளையும், நாளை மறுநாளும், கருப்பூரில் உள்ள ஹரே கிருஷ்ண கோவில் வளாகத்தில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழாவை முன்னிட்டு, ஆன்மிக பஜனை, உபன்யாசம், அபிஷேகம், ஆராதனை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. வழிபாட்டில் ஈடுபட வரும் அனைத்து பக்தர்களுக்கும், பிரசாத விருந்து அளிக்கப்படும்.கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாவையொட்டி, கிருஷ்ணரை பற்றி உபன்யாசம், இரண்டு நாட்கள் நடக்கிறது. வரும் 10ம் தேதி, கிருஷ்ணருக்கு, பலவகையான வஸ்துக்களாலும், பழச்சாறுகளாலும், பூக்களாலும், அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட எட்டு வகையான பிரசாதங்கள், பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக 9 மற்றும் 10ம் தேதிகளில், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, இரண்டு பஸ்கள் இலவசமாக, கரும்பாலை வரை இயக்கப்படுகிறது. கிருஷ்ண ஜென்மாஷ்டமியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வதால், குடிநீர், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாவில், பக்தர்கள் கலந்து கொண்டு, இறைவழிபாட்டில் ஈடுபட, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.