ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சியில் உள்ள நவபாஷாண கோயிலுக்கு அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள விக்கிரகங்களை கும்பிடுவதன் மூலம் தடைபட்ட திருமணங்கள், தோஷங்கள் நீங்க இங்கு வந்து பரிகார பூஜை செய்வது வழக்கம்.பக்தர்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய கோயில் உரிய பராமரிப்பின்றிகாணப்படுகிறது.
கடலிற்குள் அமைந்துள்ள இந்த நவக்கிரக கோயிலுக்குச் செல்லும் நடைபாதையில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. நவக்கிரக சன்னதிக்கு கடலில் உள்ள தண்ணீரில் இறங்கி சுவாமி கும்பிட வேண்டி உள்ளதால் அங்கிருக்கும் படிகள் பாசி படிந்து காணப்படுகிறது.பாதுகாப்பிற்காக அறநிலையத்துறை சார்பில் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோ, பாதுகாவலர்களோ இல்லாத நிலை உள்ளது. தண்ணீரின் அளவு சில நேரங்களில் அதிகமாக உள்ளதால் பெண்கள் உள்ளிட்டோர் இறங்குவதற்கு தயங்குகின்றனர்.பக்தர்கள் நவபாஷாண சிலை வழிபாட்டிற்கு செல்வதற்கு காலணிகளை நடைமேடைமுன்பக்கத்திலேயே கழற்றி விட்டுச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அங்கு காலணிகளை பாதுகாக்குமிடம் கூடஇல்லை. கழிப்பறைகள் மிக மோசமாக உள்ளது. வேறு வழியின்றி அதையே பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்கள் அமர ஓய்வறை கூட இல்லை. கடற்கரை ஓரமாக அம்மா பூங்கா ஒன்று இருக்கிறது. அதுவும் பூட்டப்பட்டு குப்பை நிறைந்து காணப்படுகிறது. அந்த பூங்காவை திறந்து பக்தர்கள்ஓய்வெடுக்க அனுமதித்தால்கூட நல்லது. குடிநீர் வசதி இல்லை.நவக்கிரக கோயிலுக்கு எதிர்புறத்தில் உள்ளசக்கர தீர்த்தம் மிகவும் பாசி படிந்து தெப்பத்திற்குள்ளேயே பிளாஸ்டிக் குப்பை நிறைந்து காணப்படுகிறது.
கடற்கரைக்குள் குப்பை மரத்துாசிகள் நிறைந்துள்ளது. கடலில் சேருகின்ற குப்பைகளை அகற்றாவிட்டால்மீன் போன்ற உயிரினங்கள் அக்குப்பைகளை சாப்பிட்டு இறந்துபோகும் நிலை உள்ளது. வாகனங்கள் நிறுத்துமிடத்திலும் குப்பைகளும், குடிநீர் பாட்டில்களும் ஆங்காங்கே போடப்பட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும்வகையில் உள்ளது.அறநிலையத்துறையும், ஊராட்சி நிர்வாகமும் உரியநடவடிக்கை எடுத்து கடற்கரையை பாதுகாப்பதுடன், பக்தர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தரவேண்டும்.