பதிவு செய்த நாள்
09
ஆக
2012
10:08
சேலம்: சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேலம், குகை, மாரியம்மன், காளியம்மன் கோவிலில், ஜூலை 24ம் தேதி பூச்சாட்டுதலுடன், திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம், கோவிலில், பொங்கல் வைத்தல், உருளுதண்டம் நிகழ்ச்சி நடந்தது. நேற்றிரவு, முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி விழா நடந்தது.முன்னதாக, குதை நந்தவனத்தில் இருந்து, பூசாரிகள் சக்தி கரகம் எடுத்து, காளியம்மன், மாரியம்மன் கோவில் வளாகத்தை அடைந்தனர். 21 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில், பூசாரி கார்த்திகேயன் முதலாவதாக இறங்கினார். அவரை தொடர்ந்து, சேலம் நெத்திமேடு, அன்னதானப்பட்டி, களரம்பட்டி, குகை உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கினர். சேலம் மாநகர பகுதியில் வசிக்கும், அரவாணிகள் சிலரும், பக்தியுடன் குண்டத்தில் இறங்கினர். அக்னி குண்டத்தில் இறங்கிய போது, பக்தர்கள் சிலர் கால் தவறி குண்டத்தில் விழுந்தனர். சிறிய காயம் ஏற்பட்ட அவர்களுக்கு, தனியார் மருத்துவ குழு மூலமாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.