பதிவு செய்த நாள்
28
ஜூன்
2022
10:06
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன் பாளையத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருந்தும், மசராய பெருமாள் கோவில் பராமரிப்பின்றி கிடக்கிறது.
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு அருகே பழமையான மசராய பெருமாள் கோவில் உள்ளது. ஓடு வேய்ந்த பழமையான இக்கோவில் பல்வேறு சிறப்புகளை பெற்றது. ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை, 18 கிராமங்கள் ஒன்றுகூடி இக்கோவிலில் திருவிழா எடுப்பது வழக்கம். மசராய பெருமாள் வெண்ணிற குதிரையில் எழுந்தருளி, பதினெட்டு கிராமங்களுக்கும் சென்று, இறுதியில் மசராய பெருமாள் கோவில் வளாகத்தை அடைவார். இந்த பதினெட்டு நாட்களும் நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் திருவிழா கோலம் பூண்டு இருக்கும். தற்போது, ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் போதுமான பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. கோவிலில் திருவிழா நடத்தி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இது குறித்து, நரசிம்மநாயக்கன்பாளையம் பக்தர்கள் கூறுகையில், இக்கோவிலுக்கு தற்போது, 3.35 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு பல கோடி ரூபாய் பெறும். ஆனால், கோயில் வளாகம் பராமரிப்பின்றி முட்செடிகள் நிறைந்து காணப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு கோயில் பராமரிப்பில்லாமல் கிடைக்கிறது என பக்தர்கள் புகார் எழுப்பியதால், ஹிந்து சமய அறநிலைத்துறை கோயிலின் முன்பு உள்ள முட்களை வெட்டி, புதர்களை அகற்றியது. கோயிலின் முன் பந்தல் போட்டு, ஒரு கால பூஜைக்கு ஏற்பாடு செய்தது. அதோடு சரி, கோவிலை மீண்டும் கட்ட, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.