பதிவு செய்த நாள்
02
ஜூலை
2022
05:07
சென்னை: கடலுார் மாவட்டம், வடலுார் சத்திய ஞான சபையில், வள்ளலார் வகுத்த வழிபாட்டு முறைகளின்படி தான், வழிபாடுகள் நடக்க வேண்டும் என்ற உத்தரவு சரியே என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடலுாரில், வள்ளலார் தெய்வ நிலையம் எனும் சத்திய ஞான சபை உள்ளது. இங்கு நடக்கும் பூஜை முறைகள், வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு எதிரானதாக உள்ளது என, உயர் நீதிமன்றத்தில் தொண்டர்குல பெருமாள் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவின் மீது நடவடிக்கை எடுக்க, அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அறநிலையத் துறை இணை கமிஷனர் முன் தொண்டர்குல பெருமாள் ஆஜராகி, தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ வாக்குமூலத்தில், தற்போதுள்ள சிவாச்சாரியார், பூஜை மற்றும் விபூதி பூசி, மத அடையாளங்களுடன் சபையின் கிழக்குப் பகுதியில் லிங்க பூஜை, பிரதோஷ வழிபாடுகள் செய்கிறார்.
இது, வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது.விசாரணைக்கு பின், வள்ளலார் வகுத்த வழிபாட்டு விதிகளின்படி தான் பூஜை செய்ய வேண்டும் என, இணை கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.இதை எதிர்த்து, சத்திய ஞான சபையின் அர்ச்சகரான, சபாநாத ஒளி சிவாச்சாரியார் தாக்கல் செய்த சீராய்வு மனுவை, அறநிலையத் துறை கமிஷனர் விசாரித்து, 2007 ஏப்ரலில் உத்தரவு பிறப்பித்தார்.அந்த உத்தரவில், வள்ளலார் ஏற்படுத்திய சபை வழிபாட்டு விதியில், ஜோதி தீபம், தகர கண்ணாடியில் தான் காட்ட வேண்டும்; தீபம் காட்டும் போது, அருட்பெருஞ்ஜோதி தாரக மந்திரத்தை ஓத வேண்டும். வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்களில் லட்சியம் வைக்க வேண்டாம்.
வள்ளலார் உருவாக்கிய சத்திய ஞான சபையில், அவர் வகுத்த சட்ட திட்ட நெறிமுறைகளின்படி தான் நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.அறநிலையத் துறை உத்தரவுகளை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், சபாநாத ஒளி சிவாச்சாரியார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்து, நீதிபதி கே.சந்துரு உத்தரவிட்டார்.அவரது உத்தரவில், வள்ளலாரின் கோட்பாடுகளால், அவருக்கு எதிராக எதிரிகள் பலர் உருவாகினர்; அவரது திருவருட்பாவை, எதிரிகள் மறுட்பா என வர்ணித்தனர்.வள்ளலாருக்கு எதிராக, கடலுார் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதுாறு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கில் தகுதி இல்லை என கூறியிருந்தார். கடந்த 2010 மார்ச்சில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், சபாநாத ஒளி சிவாச்சாரியார் மேல்முறையீடு செய்தார். இதை, நீதிபதிகள் டி.ராஜா, டி.வி.தமிழ்செல்வி அடங்கிய அமர்வு விசாரித்தது.இரு தரப்பு வாதங்களுக்கு பின், தனி நீதிபதியின் உத்தரவில் குறுக்கிட மறுத்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.