முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித் திருவிழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2022 07:07
சிங்கம்புணரி, சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட இக்கோயில் ஆனித் திருவிழா கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடக்கவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 9:30 மணிக்கு ரிஷப கொடி ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காலை 10:25 மணிக்கு கவுரவ சூப்பிரண்டு மற்றும் கிராமத்தார்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கோயில் கொடிமரத்தில் ரிஷப கொடியேற்றினர். தொடர்ந்து மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இரவு 9:00 மணிக்கு காப்பு கட்டப்பட்டு பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. பத்து நாள் மண்டகப்படியாக தினமும் அம்பாளுடன் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஜூலை 8ம் தேதி கழுவன் திருவிழா, 9 ம் தேதி திருக்கல்யாணம், 11ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானமும் கிராமத்தார்களும் செய்து வருகின்றனர்.