பதிவு செய்த நாள்
04
ஜூலை
2022
02:07
யத்னம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு முயற்சி எனப்பொருள் எந்த ஒரு செயலைச் செய்யத் துவங்கும் முன்பாக நாம் செய்யும் முயற்சியே யத்னம் எனப்படுகிறது. யத்னே க்ருதே யதி நஸித்யதி கோத்ர தோஷ; முயற்சி செய்தும் காரியம் பலனளிக்காவிடில் உன் மேல் தவறில்லை. ஆனால், முயற்சியே செய்யாமல் இருந்து விடாதே என்கிறது. நீதி சாஸ்திரம். மனிதர்கள் செய்யும் முயற்சியை (யத்னத்தை) விட, படைக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ப்ரம்ஹதேவனின் யத்னம் (முயற்சி) மிகவும் கடினமானது. இவ்வுலகில் ஒவ்வொரு ஜீவனையும் (உயிரையும்) ஸ்ருஷ்டி செய்யும் (படைக்கும்) முன்பாகப் பிறக்கப் போகும் அந்த ஜீவனின் (உயிரின்) நிலையை பல்வேறு விதமாக? ஆராய்ந்து, உயிரை ஸ்ருஷ்டிக்க வேண்டும். குறிப்பாக, பல்வேறு பிறவிகளில் அந்த ஜீவன் செய்துள்ள புண்ணியம் மற்றும் பாவச் செயல்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் அந்த ஜீவனின் பிறப்பை தீர்மானிக்க வேண்டும். அதாவது, இந்த ஜீவன் எந்த உடலைப் பற்றிக்கொள்ள வேண்டும்? உயிரற்ற ஜடப்பொருளையா? ஓரறிவா? இரண்டறிவா? மூன்றறிவா? நான்கறிவுள்ள ஜீவனாகவா? ஐந்தறிவா? அல்லது ஆற றிவுள்ள மனிதனாகவா? எனப் பல்வேறு விதமாக ஆராய்ந்து, மனிதன், மிருகம், பறவை, புழு, பூச்சி போன்ற எந்த உடலை ஜீவன் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
மேலும், பிறக்கப்போகும் ஜீவன் (உயிர்) எந்த தேசத்தில், எந்த ஊரில், எந்த குடும்பத்தில், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் எப்படிப்பட்ட குணங்களுடன், எப்படிப்பட்ட வாழ்க்கை முறையுடன், எவ்வளவு ஆயுட்காலமுடன் பிறப்பெடுக்க வேண்டும் போன்ற ஆயிரக்கணக்கான விஷயங்களை ஆராய்ந்து தீர்மானித்து, அதன் அடிப்படையில் ஒரு ஜீவனை பூமியில் பிறக்கும்படிச் செய்கிறவர் ப்ரம்ஹ தேவன். இவ்வாறு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு க்ஷணமும் ப்ரம்ஹ தேவன், கடுமையான முயற்சியை (யத்னத்தை) செய்ய வேண்டும்! ஆராய்ந்து பார்த்தால் இது மிகவும் கடினமானச் செயல் என்பது புரிகிறது. இதைத்தான ப்ரும்ஹ ப்ரயத்னம் எனக் கூறுகிறார்கள். அதாவது ப்ருஹ்ம ப்ரயத்னம் என்றால் மிகவும், கடினமான செயல் இது. மிகவும் கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டும் எனப்பொருள்.