பதிவு செய்த நாள்
05
ஜூலை
2022
10:07
திருநெல்வேலி: செப்பறை அழகிய கூத்தர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.
நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றம் கடந்த26ம் தேதி நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடந்தன. 7ம் நாளான கடந்த 2ம் தேதி காலை அழகிய கூத்தர், சபையில் இருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு சிவப்பு சாத்தி தரிசனம் நடந்தது. நேற்று முன்தினம் காலை10 மணிக்கு வெள்ளைசாத்தி தரிசனம், மாலை5 மணிக்கு பச்சைசாத்தி தரிசனம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அழகிய கூத்தர் திருத்தேருக்கு எழுந்தருளினார். 12.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேர் வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 1.10 மணிக்கு தேர் நிலையம் சேர்ந்தது. இன்று (5ம் தேதி) காலை11 மணிக்கு சுவாமி அழகிய கூத்தருக்கு மகாஅபிஷேகம், மதியம் ஒரு மணிக்கு நடன தீபாராதனை, சுவாமி ரதவீதி உலாவருதல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு பிற்கால அபிஷேகம், 8 மணிக்கு அலங்காரதீபாராதனைநடக்கிறது. தொடர்ந்து அழகிய கூத்தர் சபைக்கு எழுந்தருளல் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் முருகன், செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.
போலீசாருக்கு பாராட்டு : செப்பறை கோயில் தேரோட்ட திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை தாழையூத்து டி.எஸ்.பி., ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை தலைமையில்
போலீசார் செய்திருந்தனர். இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த போலீசார் அறிவுறுத்தினர். தேர் செல்லும் பாதையில் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். தேர் செல்லும் இடங்களில் மக்கள் கூடாதவகையில் கயிறு கட்டி போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க பெண்களுக்கு, போலீசார் சேப்டி பின்களையும் வழங்கினர். போலீசாரின் சிறப்பான செயலை, பக்தர்கள் பாராட்டினர்.