பதிவு செய்த நாள்
05
ஜூலை
2022
12:07
பேரூர்; பேரூரில், ஆனி நாற்று நடவு உற்சவ விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், ஆனி உற்சவ நாற்று நடவு விழா, சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த, 26ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, பேரூர் தேவேந்திர குல வேளாளர் மடத்தில், நாற்று விடுதல் நிகழ்ச்சியுடன், ஆனி உற்சவ விழா துவங்கியது.
அனைத்து நாட்களும், மாலைதோறும் நெல்நாற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. நேற்று மாலை 3:00 மணிக்கு, பட்டீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரத்துடன், அம்பாளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். மாலை, 4:00 மணிக்கு, மடத்திலிருந்து பொன்னேறு பூட்டி, பேரூர் கோவில் வாசல் நோக்கி ஊர்வலம் நடந்தது.சிவாச்சாரியார்கள் புண்யாகவாசனம் செய்து, புனித நீரை பொன்னேறுக்கு ஊற்றி ஏருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின், நாற்று நடவு மண்டபத்தில் உள்ள வயலில் ஏர் உழுது வணங்கினர். அதைத்தொடர்ந்து, சுவாமி திருமடத்துக்கு சென்று, நடப்பட்டிருந்த நாற்றுக்களை பொதுமக்கள் எடுத்து வந்தனர்.மாலை, 6:30 மணிக்கு பேரூர் கோவில் குருக்கள் வயலில் இறங்கி நாற்று நட்டார். தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் வயலில் இறங்கி, குலவை சப்தமிட்டு நாற்று நட்டனர். பட்டீஸ்வரர் சுவாமி, அம்மாள் சமேதரராக திருவீதியுலா சென்றனர்.சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையுடன், நாற்று நடவு உற்சவ விழா நிறைவடைந்தது.