ரெகுநாதபுரம் கிருஷ்ண சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2022 05:07
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் கீழவலசையில் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ண பரமாத்மா கோயில் உள்ளது. இங்கு 20வது வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.
மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. இன்று காலை 8 மணி அளவில் சுவாமி சன்னதி முன்பு யாகசாலை பூஜை பூர்ணாஹுதி நடந்தது. பின் கடம் புறப்பாடு செய்யப்பட்டு ஹோம வேள்வி நடந்தது. காலை 9:30 மணி அளவில் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணசுவாமிக்கு அலங்கரிக்கப்பட்ட மேடையில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தேறியது. பக்தர்களின் மீது அட்சதை, புனித நீர் தெளிக்கப்பட்டது. ராமநாதபுரம் விஜயராகவன் குழுவினர் திருக்கல்யாண உற்ஸவத்தை நடத்தினர். பூஜைகளை முகுந்தன் ஐயங்கார் செய்திருந்தார். மாலை 6 மணியளவில் உற்ஸவ மூர்த்திகளின் வீதியுலா புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் யாதவ சமூகத்தினர், இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர் அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.