பதிவு செய்த நாள்
07
ஜூலை
2022
12:07
மதுரை: ஆதீனம், பொது நிறுவனம் அல்ல. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் வழங்குமாறு, ஆதீன மடத்திடம் கோர முடியாது என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் தாக்கல் செய்த மனு: ஆதீனம், மடம் என்பது பொது நிறுவனம் அல்ல; அரசின் நிதி உதவியில் இயங்கவில்லை; சொந்த நிதியில் செயல்படுகிறது. தமிழ் பக்தி இலக்கியம், ஆன்மிகப் பணியில் ஈடுபடுகிறது. தமிழக அறநிலையத்துறை சட்டத்தின் சில விதிகள் ஆதீனத்திற்கு பொருந்தும். எனினும், விதிகள்படி ஆதீன நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்ய முடியாது.
ஆதீனம் மற்றும் அதன் கீழ் செயல்படும் மத நிறுவனங்கள் பற்றி சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விபரங்கள் கோரி தொந்தரவு செய்கின்றனர்.அந்த சட்டப்படி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொது நிறுவனங்களிடம் மட்டுமே விபரங்கள் கோர முடியும். ஆதீனம் தன்னாட்சி பெற்ற அமைப்பு. மடங்கள், கோவில்கள் பொது நிறுவனங்கள் அல்ல. அரசின் நிதி உதவி பெறாத தன்னாட்சி பெற்ற மத நிறுவனங்களுக்கு, தகவல் உரிமைச் சட்டம் பொருந்தாது என கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் விதிகள் ஆதீனம் அல்லது அதன் மத நிறுவனங்களுக்கு பொருந்தாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆதீனம், மடம் பொது நிறுவனம் அல்ல. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் வழங்குமாறு ஆதீன மடத்திடம் கோர முடியாது. மனு அனுமதிக்கப்படுகிறது, என உத்தரவிட்டார்.