பெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணு சித்தர் . ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயிக்கு தினமும் மாலை தொடுத்து சூட்டுவதை தன் முக்கிய பணியாக கொண்டிருந்தார் இவர். அக்காலத்தில் மதுரையில் அரசனான வல்லபதேவ பாண்டியன் நகர சோதனை வரும் போது ஒரு வேதியர் திண்ணையில் படுத்திருப்பதை கண்டு ஒரு நல்ல வார்த்தை சொல்லும்படி கேட்டார். அந்த வேதியரும் மழைக்காலத்துக்காக மற்ற எட்டு மாதங்களிலும், இரவுக்காகப்பகலிலும். கிழப்பருவத்திற்காக வாலிபத்திலும், மறுமைக்காக இம்மையிலும் முயற்சிக்க வேண்டும் என்ற சுலோகத்தை சொன்னார். மன்னனும் தம் அரசவையிலுள்ள செல்வ நம்பி என்ற அந்தணரிடம் இது பற்றி கூறினார். அதற்கு செல்வ நம்பி பரத்வ நிர்ணயம் பண்ணி அதனடியாகப் பேறு பெற வேண்டும் என்று கூறினார்.
ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெருமாள் விஷ்ணு சித்தர் கனவில் தோன்றி மதுரையில் நடந்த சம்பவத்தை கூறி உனக்குத்தான் பொற்கிழி, சென்று வாரும் என்றார். அதற்கு விஷ்ணு சித்தர், கல்லாதவனான என்னால் முடியுமா ? என்று கேட்க, பெருமாளும் இதற்கு நானே பொறுப்பு என்றார். விஷ்ணு சித்தர் மதுரை சென்று பாண்டியன் அரசவையில் வேதங்கள் பாடி ஸ்ரீமன் நாராயணனே பரன் (முதல்வன்) என்று நிலை நாட்டினார். பொற்கிழி தோரணம் தாழ அதனை எடுத்துக்கொண்டார். எல்லோரும் பாராட்டி ஆழ்வாரை யானை மீது ஏற்றி வீதி வலம் வந்த போது இக்கோலத்தை ரசிக்க பெருமாள், பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து ஆகாயத்தில் தோன்றி ஆழ்வாருக்கு காட்சியளித்தார்.
ஆழ்வார் மருண்டார். நல்ல காலத்திலேயே இம் மண்ணுலகில் தீங்கு செய்வர். இக்கலியிலே முகம் காட்டுகிறானே, இதனால் கண்திருஷ்டி பட்டு விடுமோ என்று பொங்கும் பரிவால். யானை மீதுள்ள மணிகளை ஒலித்து கொண்டு பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களாசாசனம் பண்ணினார். எனவே தான் ஆழ்வார்களிலே பெரியாழ்வார் எனப்பட்டார். பொற்கிழியை கொண்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் பெருங்கோயிலுக்கு சமர்ப்பித்து மீண்டும் தொண்டு செய்தார். கண்ணன் லீலையை முற்றும் அனுபவித்து அதன் விளைவாக பெரியாழ்வார் திருமொழி என்ற பிரபந்தத்தை வெளியிட்டார். பெரியாழ்வாரின் வம்சத் தோன்றல்கள் வேதப்பிரான் பட்டர்கள் என்ற திருநாமத்துடன் இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வருகிறார்கள். பெருமாளின் 108 திருப்பதிகளில் பெரியாழ்வார் தனியாக சென்று 2 கோயில்களையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 17 கோயில்களையும் என மொத்தம் 19 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர் தந்தை : முகுந்தர் தாய் : பதுமவல்லி பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம் நட்சத்திரம் : சுவாதி (வளர்பிறை ஏகாதசி திதி) கிழமை : திங்கள் எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி பாடிய பாடல் : 473 சிறப்பு : திருமாலின் வாகனமான கருடனின் அம்சம்