பதிவு செய்த நாள்
08
ஜூலை
2022
10:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவிலில் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவத்தின், ஏழாம் நாள் உற்சவமான தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில், மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் ஜூலை 1ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தையொட்டி காலை, இரவு என தினமும் சுவாமி, பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் உலா வருகிறார். இதில், ஐந்தாம் நாள் உற்சவமான 5ல், திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. ஏழாம் நாள் உற்சவமான நேற்று காலை 8:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், மருகுவார்குழலி அம்பிகையுடன் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் காந்தி நான்கு ராஜவீதிகள் வழியாக உலா வந்தார். பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து சுவாமியை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.நேற்று நடந்த தேரோட்டத்தின் போது, தேர் போல அலங்கரிக்கப்பட்ட சப்பரம், கிழக்கு ராஜ வீதியாக சென்ற போது, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்ததால் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, நோயாளி ஒருவரை அழைத்து ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று அலறியபடி பஸ்நிலையம் நோக்கி வேகமாக வந்தது. அப்போது, தேர் சப்பரத்தை சுமந்து சென்றவர்கள், சப்பரத்தை சாலையோரமாக, ஓரங்கட்டினர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஒரு நொடி கூட தாமதிக்காமல் தடையின்றி சென்றது.