நாட்கள் வேகமாக நகருகிறது. எல்லோரும் முன்னேறுகிறார்களே.. நான் மட்டும் ஒரே இடத்தில் இருக்கிறேனே... ஏதாவது வழி கிடைக்காதா? என தத்தளிக்கிறதா உங்களது மனம். சிறிது நேரம் அந்த மனதை பூட்டி விட்டு, நாமக்கல் ரெட்டிப்பட்டிக்கு வாருங்கள். அங்கு கந்தகிரி மலையில் உள்ள ஜம்புகேஸ்வரரை தரிசியுங்கள். முன்பு இங்கு ‘வெறி கோவிந்தர்’ என்னும் சித்தர் வாழ்ந்து உள்ளார். என்னடா இவரது பெயர் ஒரு மாதிரி இருக்கே என யோசிக்காதீர்கள். அவருக்கு அருகே யாராவது சென்றால் வெறிபிடித்தவர் போல் ஆகிவிடுவார். இதற்கு காரணம் சிவன் மீது கொண்ட காதல். இருந்தாலும் திடீரென யாரையாவது அவர் அழைத்து பேசுவார். அதன் பின் அவர்களது வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்படும். அவர் ஜீவசமாதியான இந்த மலைமீது ஜம்புலிங்கேஸ்வரர் உள்ளார். மலை ஏறத்துவங்கியதும் வலப்புறத்தில் சிவன் தியானத்தில் இருக்கும் காட்சியை காணலாம். சில்லென வரும் காற்று உங்களை சீராட்டும். எங்கு பார்த்தாலும் பசுமையாக இருக்கும். அதற்கு பின் சில படிகள் ஏறியதும் கண்ணப்ப நாயனாரை கண்குளிர தரிசனம் செய்யலாம். இந்த இடத்தில் இவரது சிவபக்தியை சொல்லியே ஆக வேண்டும். ஏதாவது ஒரு கோரிக்கையை கடவுளிடம் வைப்பதுதான் நமது பக்தி. ஆனால் அவர் அப்படி அல்ல.. இதை எல்லாம் தாண்டியவர். தனது கண்ணையே தோண்டி சிவனுக்கு அளித்தவர். சிவத்தொண்டினால் காலத்தை தாண்டி நிற்பவர்தான் கண்ணப்பர். இப்படி 39 படிகளை கடந்ததும், சிறு குகை நமது கண்களுக்கு தென்படும். அதற்கு உள்ளே கிழக்கு நோக்கி இருப்பவர்தான் நாம் தேடி வந்த ஜம்புகேஸ்வரர். என்னவென்று விவரிக்க முடியாத அமானுஷ்யமும், தெய்வீகமும் சூழ்ந்திருக்கும் இடம் அது. அங்கே சென்றவுடனே மனதில் உள்ள சுமைகள் இறங்கிவிடும். படியேறி வந்த களைப்பும் கலைந்துவிடும். காற்றின் குளுமை, ஜம்புகேஸ்வரரின் அருளால் அங்கு செல்பவர்களின் மனம் குளுமையாகும்.
எப்படி செல்வது: நாமக்கல் பஸ்ஸ்டாண்டில் இருந்து 5 கி.மீ.,