பெண் நாயன்மார்களில் ஒருவர் காரைக்கால் அம்மையார். இவர் கயிலாயத்திற்கு தலையால் நடந்து சென்றார். சிவபெருமானால் அம்மையே (அம்மா) என அழைக்கப்பெற்றார். புதுச்சேரி காரைக்கால் நகரில் பிறந்த இவர், பரமதத்தன் என்னும் வணிகரை திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபட்டார். ஒருநாள் வீட்டில் இருந்த இரண்டு மாங்கனிகளில் ஒன்றினைச் சிவனடியாருக்கு பிச்சையிட்டார். மற்றொன்றை கணவருக்கு கொடுத்தார். அதைச் சாப்பிட்ட அவர் இரண்டாவது மாங்கனியை கேட்டார். செய்வதறியாமல் திகைத்த அம்மையார் சிவனிடம் வேண்டி மாங்கனியைப் பெற்றார். நிகழ்ந்ததை அறிந்த கணவர் மீண்டும் சிவனிடம் மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்ட அவ்வாறே பெற்றார். இதன்பின் திருவாலங்காட்டில் சிவ தரிசனம் கிடைக்கப் பெற்றார். அம்மையாரை பெருமைப்படுத்தும் விதமாக புதுச்சேரி காரைக்கால் சோமநாதர் கோயிலில் ஆனி மாதம் பவுர்ணமி அன்று (2022 ஜூலை 14) மாங்கனித்திருவிழா நடக்கிறது. இதில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற தேர் மீது மாங்கனிகளை வாரி இறைப்பர்.