காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்க முடியாத நிலையில் மனதில் நினைத்தாலும் அருள்புரிவார் என்பதை அனுபவத்தில் அறிந்தவர்கள் பலர். ஒருமுறை ராமகிருஷ்ணன் என்ற பக்தர் காஞ்சி மடத்திற்கு வந்த போது, ‘‘எங்கு வேலை செய்கிறாய்?’’ என மஹாபெரியவர் கேட்க, சினிமா தியேட்டரில் வேலை செய்வதாக கூறினார், ‘நம் மடத்தில் வேலை செய்கிறாயா’ என சுவாமிகள் கேட்க மடத்தில் பணியாளராகச் சேர்ந்தார். நாளடைவில் ஆஸ்துமா, வலிப்பு நோய் ஏற்படவே சிகிச்சை எடுத்து வந்தார். ஒருநாள் இரவு, ‘‘ இனி மாத்திரை சாப்பிட வேண்டாம் சந்திர மவுலீஸ்வரர் அபிேஷக தீர்த்தத்தை 48 நாட்கள் சாப்பிட்டு வா. குணம் பெறுவாய்’’ என கனவில் அருள்புரிந்தார் மஹாபெரியவர். அதன்படியே நோய் நீங்கப் பெற்றார். மற்றொரு சமயம் கால்முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். அப்போது இவரது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர் திசாபுத்தி காலம் மோசமாக உள்ளதாக தெரிவிக்கவே குடும்பத்தினர் வருந்தினர். ஆனால் ராமகிருஷ்ணன் மானசீகமாக மஹாபெரியவரை வழிபட்டு வந்தார். அவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் குணம் பெற்றார். கர்நாடகா ஹூப்ளியைச் சேர்ந்தவர் நடராஜன். ஒருமுறை இவர் ணபெல்காமில் முகாமிட்டிருந்த மஹாபெரியவரை தரிசித்து விட்டு பேருந்து நிலையத்திற்கு வந்தார். இரண்டு மணி நேரம் காத்திருந்தும் பஸ் வரவில்லை. மஹாபெரியவரிடம் உத்தரவு பெறாமல் புறப்பட்டதே தாமதத்திற்கு காரணம் என்பதை உணர்ந்து, மானசீகமாக நினைத்து மன்னிக்க வேண்டினார். அப்போது அவரருகில் வேன் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்த நபர், ‘‘ வேன் ஹூப்ளிக்கு போகுது... வர்றீங்களா’’ எனக் கேட்க மகிழ்ச்சியுடன் ஏறி அமர்ந்தார். நிம்மதியாக பயணித்தார்.
ஒருமுறை ஐதராபாத்தில் முகாமிட்டிருந்தார் மஹாபெரியவர். மதுரையில் இருந்து கிருஷ்ணமூர்த்தி என்னும் பக்தர் ரயிலில் அங்கு சென்றார். தரிசித்து விட்டு பிரசாதம் கேட்ட போது, ‘‘இன்று தங்கி விட்டு நாளை செல்லலாம்’’ என்றார் மஹாபெரியவர். அதை ஏற்று கிருஷ்ணமூர்த்தியும் அன்றிரவு ஓய்வெடுக்க ஓட்டலுக்குச் சென்றார். அங்கு அவரை சந்தித்த ரயில்வே அதிகாரி ஒருவர் மஹாபெரியவரை தரிசிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். முகாமிற்கு அதிகாரியுடன் வந்த பக்தர் மீண்டும் தரிசனம் செய்தார். அதிகாரியிடம் தன் பயணத்திட்டம் மாறிப் போனதை தெரிவித்த போது, மாற்று ஏற்பாடு செய்து மதுரைக்கு அனுப்பியும் வைத்தார்.