திருமங்கலம்: திருமங்கலம் அருகே நடந்த புரவி எடுப்பு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேற்று கடன் செலுத்தி, சாமி தரிசனம் செய்தனர்.
திருமங்கலம் அருகே நடுவக்கோட்டையில் பழைமை வாய்ந்த கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று 150 வதுஆண்டு புரவி எடுப்பு திருவிழா நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மண்ணால் குதிரைகள் தயார் செய்யப்பட்டன. நேற்று ஊர் மந்தையில் வைத்து குதிரைகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து ஊர் மந்தையில் இருந்து கருப்பசாமி கோயில் வரை மேல தாளங்களுடன் கிராம மக்கள் ஊர்வலமாக சென்று குதிரைகளை கோவிலில் செலுத்தினர். பல்வேறு விதமான வேடங்கள் அணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்து தங்களுடைய நேர்த்திக் கடனையும் செலுத்தினர். இதை அடுத்து கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. பொதுமக்கள் திருவிழாவிற்கு வந்தவர்களுக்கு கறி விருந்து அன்னதானம் வழங்கினர்.