பதிவு செய்த நாள்
11
ஆக
2012
11:08
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று ஆடிக்கிருத்திகை விழா, வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முருகன் கோவில்களிலும், அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. காஞ்சிபுரம் குமர கோட்டத்தில், ஆடிக் கிருத்திகையையொட்டி, நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சின்னகாஞ்சிபுரம் திரவுபதியம்மன் கோவிலிருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, காவடி ஏந்தியபடி குமரகோட்டம் வந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். சில பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்தனர். அம்மன் கோவில்களிலும் பால் குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அனைத்து கோவில்களிலும், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று ஆடிக்கிருத்திகை விழா, வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மூலவர் வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டையடித்து, சரவணப் பொய்கையில் நீராடி, நீண்ட வரிசையில் நின்று கந்தனை வழிபட்டனர். மாலை ஐந்து மணிக்கு, உற்சவருக்கு அபிஷேகம் மற்றும் தீப, தூப ஆராதனை நடந்தது. மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பேரூராட்சி சார்பில், குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.மறைமலை நகர்காயரம்பேடு, மூலக்கழனி, முத்து மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழாவையொட்டி நேற்று அம்மனுக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை ஒன்பது மணிக்கு, காயரம்பேடு, காசியம்மன் கோவிலிருந்து பெண்கள் மற்றும் சிறுவர்கள், 308 பால்குடங்களை எடுத்து சென்று, முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.