முல்லாவின் அறிவாற்றலைக் கண்ட மன்னர், அவரை நீதிபதியாக நியமித்தார்.அவரிடம் விசித்திர வழக்கு ஒன்று வந்தது. அப்பாஸ் என்பவர் புகார் ஒன்றினைக் கொண்டு வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு நாட்டில் மழை இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டது. அதனால் பிழைப்புக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை. என்னிடம் இருந்த தங்க நாணயங்களை ஜாடியின் அடிப்பாகத்தில் வைத்து அதற்கு மேல் பேரீச்சை பழங்களை நிரம்பி பக்கத்து வீட்டு மைதீனிடம் கொடுத்துச் சென்றேன். திரும்பி வந்த நான் அதனை அவரிடம் கேட்ட போது பேரீச்சம் பழம் மட்டும் இருந்த ஜாடியை தந்தார். நாணயங்களை எடுத்துக்கொண்டார் என்பதே புகார். அப்பாஸ் கூறியது உண்மைதானா என மைதீனிடம் விசாரித்தார் முல்லா. ஒருவருடத்திற்கு மேல் பேரீச்சம் பழ ஜாடி தந்தது உண்மை தான் என கூறினார். முல்லா ஜாடியை கொண்டு வரச்சொன்னார். அதில் இருந்த ஒரு பழத்தை எடுத்து சாப்பிட்டு பார்த்த முல்லா பழம் நன்றாக ஊறவில்லையே எனக் கூறினார். அதற்கு மூன்று மாதம் ஆகியுமா இன்னும் ஊறவில்லை என வாய் திறந்து முல்லாவிடம் கேட்டார் மைதீன். மைதீன் அவர்களே! உங்களுடைய வாயிலிருந்தே உண்மை வந்து விட்டது. நீர் திருடிய நாணயத்தை நாளை அப்பாஸிடம் வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விடுங்கள். இல்லாவிடில் கடும் தண்டனை கிடைக்கும் என தீர்ப்பு வழங்கினார்.