வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பெண் சிற்பம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2022 11:07
சென்னை: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடக்கும் அகழாய்வில் வரலாற்றுக்கு முற்பட்ட சுடுமண் பெண் சிற்பம் கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் வைப்பார் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது வெம்பக்கோட்டை கிராமம். இங்கு 25 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் கலாச்சார வைப்பு மேடு உள்ளது.இந்த மேட்டை மேட்டுக்காடு என்றும் உச்சிமேடு என்றும் உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். இது தரைமட்டத்தில் இருந்து இரண்டு மீட்டர் உயரமுள்ளது.
இங்கு தமிழக தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வு நடக்கிறது. இங்கு வரலாற்றுக்கு முந்திய இடைக்காலத்திலிருந்தே தொடர்ச்சியான வாழ்விடம் இருந்துள்ளது தெரிய வந்து உள்ளது. இதுவரை தோண்டப்பட்டுள்ள எட்டு குழிகளில் கார்னிலியன் அகேட் அமேதிஸ்ட் மற்றும் கிரிஸ்டல் போன்ற விலைஉயர்ந்த கல் மணிகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் பல்வேறு வண்ணங்களால் ஆன கண்ணாடி மணிகள் சங்கு வளையல்கள் கண்ணாடி வளையல்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.அதேபோல் சுடுமண்ணால் ஆன பதக்கங்கள் பொம்மை பொருள்கள் சிலைகள் எடைக்கற்கள் பந்துகள் செப்புச் சாமான்கள் சக்கரங்கள் மணிகள் விளையாட்டு வீரர்கள் புகைபிடிக்கும் குழாய்கள் தீற்றும் கற்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.
அவற்றுடன் இரும்பு செம்புப் பொருட்கள் கருங்கல் புல்லாங்குழல் உள்ளிட்ட கருவிகளின் மிச்சங்கள் என வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் நிறைய கிடைத்துள்ளன.தந்தத்தால் ஆன பதக்கங்கள் பகடைக்காய் கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள் கூரை ஓடுகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. மேலும் சுண்ணாம்பால் செய்யப்பட்ட சேமிப்பு ஜாடி இரும்பு கண்ணாடி கச்சாப்பொருட்கள் கருகிய எலும்புகள் விலங்குகளின் பற்கள் யானையின் பல் உள்ளிட்ட 2080 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றில் கையால் செய்யப்பட்ட நிற்கும் சுடுமண் பெண் சிற்பம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது 6 செ.மீ. உயரம் 4.1 செ.மீ. அகலம் 1.6 செ.மீ. அளவு கொண்டதாக உள்ளது.இதில் உடைந்த தலை கிள்ளப்பட்டுள்ள மூக்கு மிகப் பெரிய மார்பகம் உள்ளது. மேலும் வெளிநீட்டிய கைகள் கழுத்து இடுப்பில் நகை அணிந்துள்ளதுடன் கழுத்துக்குக் கீழ் முன்பக்கம் மூன்று பொத்தான்கள் அலங்காரம் செய்யப்பட்டு மூடப்பட்ட கால்கள் என சிறப்பாக உள்ளது.இந்த தொல்பொருட்களை வைத்து இங்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக இவை உள்ளன.