பதிவு செய்த நாள்
21
ஜூலை
2022
10:07
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரடியில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்த பழங்காலபாதுகாப்பு அறையை அதிகாரிகள் மீட்டனர்.
விருத்தாசலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது.இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம், ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் உட்பட ஆண்டுதோறும் திருவிழாக்கள் விமர்சையாக நடக்கிறது. தினசரி ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர்.
கோவிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகள், எதிரில் உள்ள தேரடியில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு கட்டடங்கள், கடைகள் இருந்தன.இந்து சமய அறநிலையத் துறை அப்போதைய உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா முயற்சியால், ஆக்கிரமிப்பு அகற்றம், நிலங்கள் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்தன.கடந்த பிப்ரவரி 6ம் தேதி கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, தேரடியில் 20 கடைகள், கிழக்கு கோபுர வாசலில் இருந்த 12 கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன.மேலும், நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் 70 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டன.
தொடர்ந்து, கடந்த ஜூன் 10ம் தேதி, தேரடியின் மறுமுனையில் இருந்த 10 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.இந்நிலையில், தேரடியில் மீதமிருந்த லேத் பட்டறை மற்றும் வாழைப்பழ கடை நேற்று அதிரடியாக அகற்றும் பணி நடந்தது. உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா முன்னிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு சுவர் இடித்து அகற்றப்பட்டன. தேரடி மாடத்தின் படிக்கட்டுகள் சேதமடையாதவாறு, இயந்திரம் இல்லாமல் சுவரை அகற்றும் பணி நடந்தது.
அப்போது, பஞ்சமூர்த்திகளின் தேர்களுக்கு தேவையான தளவாடப் பொருட்களை பாதுகாக்கும் அறை ஒன்று ஆக்கிரமிப்பில் மறைந்து இருப்பது, தெரிய வந்தது.பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த அறை, அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சியால் நேற்று மீட்கப்பட்டது. 40 அடி நீளமுள்ள அறைக்கு, பழமையான முறையில், இரும்பு கதவுகளும் போடப்பட்டிருந்தது.சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அறை, பக்தர்கள் பலருக்கும் தெரியாமல் இருந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், பாதுகாப்பு அறையை கம்பி வேலி போட்டு மூடி வைக்காமல், தேர்களுக்கான தளவாடப் பொருட்களை சேமிக்கும் வகையில் மாற்ற வேண்டும்.வெயில், மழை, புயல் போன்ற பேரிடர்களை தாங்கும் வகையில், உருவான பாதுகாப்பு அறையை மூடி வைப்பதில் நியாயம் இல்லை என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.எனவே, தேரடியில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட தேர்கள் தளவாடப் பொருட்கள் பாதுகாப்பு அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.