பதிவு செய்த நாள்
22
ஜூலை
2022
05:07
ஓசூர்: ஓசூர் கால்நடை பண்ணையில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரியில், 2,000 ஏக்கரில் கால்நடை வளர்ப்பு பண்ணை உள்ளது. இங்கு கல்வட்டம் இருப்பதாக கிடைத்த தகவல்படி, அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் அறம்கிருஷ்ணன், வரலாற்று ஆசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கால்நடை பண்ணை மூன்றாவது கேட் முன்பகுதியில், இரண்டு துண்டுகளாக உடைந்த நிலையில், 13 அல்லது 14ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல் கேட்பாரற்று கிடக்கிறது. எதிரே உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி பல்கலை பின்புறம், மிகப்பெரிய கல்வட்டம் உள்ளது. இது, 50 அடி விட்டத்திலும், சுற்றியும் பெரும் பாறைகளை வட்டமாகவும் வைத்துள்ளனர். தமிழகத்தில் இரும்பின் பயன்பாடே, 4,200 ஆண்டுகளை கடந்து இருக்கிறது. கல்வட்டங்களின் வயது இதனினும் தொன்மையானதாக இருக்க வேண்டும். இறந்தவர்களின் நினைவாக கல்வட்டங்கள் ஏற்படுத்தும் முறையை தொடங்கியிருக்க வேண்டும். கல்வட்டம் அதன் தொடர்ச்சியாக கற்பதுக்கை, கற்திட்டை, குத்துக்கல், நடுகற்கள் என, நம் பண்பாட்டு வளர்ச்சி தொடர்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.